2017-03-15 15:51:00

போதைப்பொருள் அடிமைகள், பழுதடைந்த இயந்திரங்கள் அல்ல


மார்ச்,15,2017. போதைப்பொருள் பயன்பாட்டிற்கு அடிமையாகும் நிலை, வெறும் உடல் சார்ந்த பிரச்சனை மட்டும் அல்ல, மாறாக, அது, குடும்பம், சமுதாயம் என்ற அனைத்து நிலைகளிலும் பாதிப்புக்களை உருவாக்குகிறது என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

போதைப்பொருளைக் குறித்து கண்காணிக்கும் ஐ.நா. அமைப்பு, வியென்னா நகரில், இச்செவ்வாயன்று மேற்கொண்ட ஒரு கூட்டத்தில், திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்ற அருள்பணியாளர் Janusz Urbancyzk அவர்கள், போதைப்பொருள் ஆதிக்கத்தைத் தடுப்பதில் ஐ.நா. அவை காட்டிவரும் அக்கறையை பாராட்டினார்.

போதைப்பொருள் உற்பத்தி, வர்த்தகம் என்ற வழிமுறைகளை தடுப்பதற்கு அரசுகள் இன்னும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளாமல் இருப்பதும், இந்தக் குற்றங்களில் ஈடுபடுவோரைத் தடுப்பதில் அரசுகள் தாமதம் செய்வதும், இந்தக் குற்றம் வளர்வதற்கு வழி வகுக்கின்றன என்று, அருள்பணி Urbancyzk அவர்கள் சுட்டிக்காட்டினார்.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை, பழுதடைந்த ஓர் இயந்திரம் போல கருதுவது தவறு என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியதை, தன் உரையில் சுட்டிக்காட்டிய அருள்பணி Urbancyzk அவர்கள், இப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை, மனிதர்களாக மதித்து, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.