2017-03-15 13:25:00

திருத்தந்தை – எதிர்நோக்கி இருப்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்


மார்ச்,15,2017. உங்கள் அன்பு கள்ளமற்றதாய் இருப்பதாக! தீமையை வெறுத்து நன்மையையே பற்றிக்கொள்ளுங்கள். உடன் பிறப்புகள் போன்று ஒருவருக்கொருவர் உளங்கனிந்த அன்பு காட்டுங்கள்; பிறர் உங்களைவிட மதிப்புக்கு உரியவரென எண்ணுங்கள். விடா முயற்சியோடும் ஆர்வம் மிக்க உள்ளத்தோடும் ஆண்டவருக்குப் பணிபுரியுங்கள். எதிர்நோக்கி இருப்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்; துன்பத்தில் தளரா மனத்துடன் இருங்கள்; இறைவேண்டலில் நிலைத்திருங்கள். வறுமையுற்ற இறைமக்களோடு உங்களிடமுள்ளதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; விருந்தோம்பலில் கருத்தாய் இருங்கள்(உரோ.12,9-13). அன்பு நேயர்களே, கிறிஸ்தவ வாழ்க்கைக்குரிய ஒழுங்குகள் என, பவுலடிகளார் உரோமையருக்கு எழுதிய திருமடலின் இந்தப் பகுதியை மையமாக வைத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதன் காலை பத்து மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் அமர்ந்திருந்த, பல நாடுகளின் பன்னிரண்டு ஆயிரத்திற்கு மேற்பட்ட திருப்பயணிகளுக்கு மறைக்கல்வியுரை வழங்கினார்.

அன்புச் சகோதர சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசு நமக்கு விட்டுச்சென்றுள்ள மாபெரும் கட்டளை அன்புகூருங்கள் என்பதே. நாம் எல்லாரும் அன்புகூர, பிறரன்பில் வளர அழைக்கப்பட்டிருக்கிறோம். நம் ஆண்டவர் நமக்கு கட்டளையிட்டுள்ளது போன்று, அன்புகூர்வது எவ்வளவு கடினம் என்பதை நாம் அறிந்திருக்கின்றோம். நம் அன்பு, எத்தனையோ முறை தன்னலத்தால் கறைபட்டுள்ளது. அன்பு, பிறரன்பு ஓர் அருளாகும். இது, கடவுளின் அன்போடு, நம் மீட்பளிக்கும் சந்திப்பின் கனியாக உள்ளது. நம் ஆண்டவரின் அருள் நம் பாவங்களை மன்னிக்கின்றது, நம் இதயங்களைக் குணப்படுத்துகின்றது மற்றும், அவரின் எல்லையில்லா அன்பின் வாய்க்கால்களாக நாம் மாறச் செய்கின்றது என, புனித பவுல் நமக்கு நினைவுபடுத்துகின்றார். தூய்மையான மற்றும், தன்னலமில்லா அன்புடன் நம் சகோதர சகோதரிகளை அன்புகூர்வதற்கு நாம் எடுக்கும் முயற்சிகள், கிறிஸ்துவில் நாம் காட்டும் அன்புக்கு, உண்மையிலேயே பதிலளிப்பதாக அமைகின்றன. நம் மனிதப் பலவீனத்தை உணர்ந்தவர்களாய், நம்மிடமுள்ள அவரின் அன்புக் கொடையை புதுப்பிப்பதற்கும், மற்றவருக்கு, குறிப்பாக, தேவையில் இருப்போர்க்கு அந்த அன்பின் சாட்சிகளாக நாம் வாழவும், ஒவ்வொரு நாளும், ஆண்டவரிடம் மன்றாடுவோம். பிறரன்பு வாழ்வில் வளரவும், இறைத்தந்தையின் இரக்கமுள்ள அன்புக்கு மற்றவரை ஈர்க்கவும் நாம் முயற்சிக்கும்வேளை,  “எதிர்நோக்கி இருப்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்” (உரோ.12:12) என்ற, திருத்தூதர் பவுல் அவர்களின் கட்டளையை நாம் நிறைவேற்றுகின்றவர்கள் ஆவோம்.

இவ்வாறு, தனது மறைக்கல்வியை நிறைவு செய்த திருத்தந்தை, இத்தவக்காலம், அருளின் மற்றும், ஆன்மீகப் புதுப்பித்தலின் காலமாக இருக்கட்டும் என அனைத்துப் பயணிகளையும் வாழ்த்தினார். மேலும், இதில் கலந்துகொண்ட “Sky Italia” அமைப்பினருக்கென செய்தி சொன்ன திருத்தந்தை, இந்த அமைப்பின் பணியாளர்கள், அனைவரின் உரிமைகளை, குறிப்பாக, குடும்பங்களின் உரிமைகளை பாதுகாக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும், சிவப்பு நிறக் கொடியுடன் வந்திருந்த சீன மக்கள் குழுவில், குறிப்பாக ஒரு குடும்பத்தினர், நெடுஞ்சாண்கிடையாக விழுந்து திருத்தந்தையின் பாதங்களைத் தொட்டு ஆசீர் கேட்டது, எல்லாரின் உள்ளத்தை உருக்குவதாக இருந்தது. இக்குழுவினர் தாங்கள் வைத்திருந்த, பாத்திமா அன்னை திருவுருவங்களையும் திருத்தந்தையிடம் காட்டி ஆசீர் பெற்றனர். இப்புதன் மறைக்கல்வியுரையின் இறுதியில், திருப்பயணிகள் அனைவருக்கும், தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.