2017-03-15 13:40:00

தவக்காலச் சிந்தனை : வீண் செலவுகளைத் தவிர்ப்போம்


மார்ச்,15,2017. இன்றைய நற்செய்தியில் (லூக்:16,19-31) இயேசு கூறுகின்ற செல்வர் மற்றும் ஏழை இலாசரின் உவமை, அதனோடு நமது வாழ்வை  உரசிப்பார்க்க அழைப்புவிடுகின்றது. நமது அன்றாட வாழ்வை நாம் சற்று உற்றுநோக்கினால், நாம் செய்கின்ற வீண் செலவுகளும், ஆடம்பரச் செலவுகளும் நமக்குத் தெளிவாக புலப்படும். நாம் கொண்டாடும் இல்ல நிகழ்வுகளையும், திருவிழாக்களையும் எடுத்துக்கொண்டால் நாம் மேற்கொள்கின்ற தேவையற்ற செலவுகள் ஏராளம். பிறர் நம்மைப் பார்த்து வியக்கவேண்டும், பிறர் நம்மைப் புகழவேண்டும் என்று, வீண் பெருமைக்காக, நாம் செய்கின்ற பகட்டான செலவுகள் ஏராளம். நமது நண்பர்களோடு அல்லது குடும்பத்தோடு உணவகங்களுக்கு செல்லும்பொழுது தேவைக்கதிகமாக உணவினை வாங்கி, வீணாக்குகின்றோம். நாம் அணியும் ஆடைக்கு ஏற்ற நிறமாக இருக்கவேண்டுமென்று எண்ணற்ற காலணிகளையும், கைக்கடிகாரங்களையும் வாங்கி அடுக்கி வைக்கின்றோம். பெரும்பாலான நேரங்களில் இவை யாரும் பயன்படுத்தாமல் அப்படியே இருக்கின்றன. இவ்வாறு வீண் செலவுகள் செய்யும் நம் மத்தியில்,  அடிப்படைத் தேவைகளான நல்ல உணவு, உடை, உறைவிடம், கல்வி, மருத்துவம் போன்றவை இல்லாமல் துன்பப்படுகிற பலர், நம் மத்தியில் வாழ்கின்றனர். இந்த தவக்காலத்திலே, நமது ஆடம்பர செலவுகளைக் குறைத்து, நம்மிடம் உள்ளதை, இல்லாதவர்களோடு பகிர்ந்துகொள்ள முன்வருவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.