2017-03-15 15:44:00

சிரியாவில் நடைபெறும் மதியற்ற உயிரழிவுகள் குறித்து திருப்பீடம்


மார்ச்,15,2017. ஆறு ஆண்டுகள் வன்முறையைச் சந்தித்து வரும் சிரியா நாட்டு மக்கள், உயிர் பலி, சிதறுண்ட குடும்பங்கள், தகர்க்கப்பட்டுள்ள இல்லங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் என்ற கடுமையான எதார்த்தத்தை சந்தித்து வருகின்றனர் என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. அவை கூட்டங்களில், திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்றுவரும், பேராயர் Ivan Jurkovič அவர்கள், சிரியா நாட்டின் தற்போதையை நிலை குறித்து, மனித உரிமைகள் அவை, இச்செவ்வாயன்று மேற்கொண்ட ஒரு கலந்துரையாடலில் இவ்வாறு கூறினார்.

இவ்வுலகின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு போர் ஒருகாலும் உதவாது என்பதை, கடந்த ஆறு ஆண்டுகளாக சிரியாவில் நடைபெற்றுவரும் பொருளற்ற, மதியற்ற உயிரழிவு தெளிவுபடுத்தியுள்ளது என்று, பேராயர் Jurkovič அவர்கள், தன் உரையில் வலியுறுத்திக் கூறினார்.

அரசியல் சக்திகளின் கட்டுக்கடங்கா தன்னலமும், அதை வளர்ப்பதற்கு, போர்க்கருவிகளையும், நிதி உதவிகளையும் தரும் வெளிநாட்டு நிறுவனங்களும் ஆறு ஆண்டுகளாகத் தொடரும் வன்முறைகளுக்கு முழு காரணங்கள் என்று பேராயர் Jurkovič அவர்கள், குற்றம் சாட்டினார்.

2011ம் ஆண்டு முதல், சிரியாவிலிருந்து 50 இலட்சம் மக்கள் வெளியேறியுள்ளனர், 1 கோடியே 35 இலட்சம் மக்கள் தேவையில் உள்ளனர் என்றும், இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என்றும், தன் உரையில் சுட்டிக்காட்டிய பேராயர் Jurkovič அவர்கள், உரையாடல் ஒன்று மட்டுமே, சிரியாவைக் காப்பாற்ற முடியும் என்று எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.