2017-03-14 15:14:00

விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 11


மார்ச் 9, கடந்த வியாழனன்று, இத்தாலி நாட்டின் அங்கோனா (Ancona) என்ற நகருக்கருகே, நிகழ்ந்த ஒரு விபத்தில், நடுத்தர வயது நிறைந்த தம்பதியர் கொல்லப்பட்டனர். 60 வயதான எமிதியோ அவர்களும், அவரது மனைவி, 54 வயதான ஆந்தோனெல்லா அவர்களும், தங்கள் காரில், மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர். சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த ஒரு மேல்தள சாலை திடீரென இடிந்து, அவர்கள் சென்ற காரின் மீது விழுந்ததால், இருவரும் கொல்லப்பட்டனர். இந்த விபத்து நிகழ்ந்ததற்கு காரணம் என்ன என்ற தேடல் ஆரம்பமானது. கடந்த ஒரு வாரமாக நிகழும் இத்தேடலில், அரசுத் துறைகள், வழக்கம்போல், ஒன்றையொன்று, குறைகூறி வருகின்றன. கொல்லப்பட்ட தம்பதியரின் குடும்பத்தினரோ, வேறுபல கேள்விகளுடன் போராடி வருகின்றனர்.

துன்பங்கள் நம்மை வந்தடையும் வேளையில், அவற்றின் நிழல்போல, கேள்விகளும் தொடர்ந்து வருகின்றன என்பதை நாம் அனைவரும் உணர்ந்திருக்கிறோம். மத நம்பிக்கையுள்ளவர்கள், துன்பங்களைச் சந்திக்கும்போது, அவர்களைச் சூழும் கேள்விகளில், கடவுளைப்பற்றியக் கேள்விகளும் இடம் பெறுகின்றன. இக்கேள்விகளுக்கு பதில்சொல்லும் முயற்சியாக, விவிலியம், கிறிஸ்தவ நம்பிக்கை இவற்றை அடித்தளமாகக் கொண்டு, அவ்வப்போது நூல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன.

இந்நூல்களில் ஒன்று, துன்பங்களின் பிடியில் சிக்கியிருப்போர் அடிக்கடி எழுப்பும் ஒரு கேள்வியை, தலைப்பாகக் கொண்டுள்ளது. "Where Is God When It Hurts?", அதாவது, "வலிக்கும்போது, கடவுள் எங்கே?" என்பது, பிலிப் யான்சி (Philip Yancey) அவர்கள், 40 ஆண்டுகளுக்கு முன், 1977ம் ஆண்டு வெளியிட்ட நூலின் தலைப்பு.

1990ம் ஆண்டு, திருத்தி எழுதப்பட்ட இந்நூல், 2001ம் ஆண்டு, மீண்டும் ஒரு முறை கூடுதல் பக்கங்களோடு வெளியிடப்பட்டது. 2001ம் ஆண்டு, நியூ யார்க் நகரில் வர்த்தக கோபுரங்கள் தாக்கப்பட்டபோது, மக்கள் மனங்களில் எழுந்த கேள்விகளுக்குப் பதில் தரும் வகையில், கூடுதல் எண்ணங்களை இணைத்து, யான்சி அவர்கள் இந்நூலை மீண்டும் வெளியிட்டார். இதே சமுதாய துன்பத்திற்கு பதில் தரும் வகையில், யூத மத குரு ஹெரால்டு குஷ்னர் அவர்கள், 23ம் திருப்பாடலை மையப்படுத்தி, "ஆண்டவர் என் ஆயன்" என்ற நூலை வெளியிட்டார் என்பதை நாம் அறிவோம். மனித துன்பங்களுக்கு, விவிலியத்தின் துணை கொண்டு விளக்கங்கள் சொல்லும் முயற்சிகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.

பிலிப் யான்சி அவர்கள் எழுதியுள்ள "வலிக்கும்போது, கடவுள் எங்கே?" என்ற நூலில், 'A Problem That Won't Go Away', அதாவது, 'போகமறுக்கும் ஒரு பிரச்சனை' என்ற தலைப்பில் எழுதியுள்ள முதல் பிரிவில் ஆசிரியர் பகிர்ந்துகொள்ளும் ஓர் உண்மை நிகழ்ச்சி, யோபுநூலில் நாம் மேற்கொண்டுள்ள தேடலுக்கு, நம்மை அழைத்துச் செல்கின்றது.

ஜான், கிளவுதியா, இருவரும், காதலித்து, திருமணம் புரிந்துகொண்ட இளம் தம்பதியினர். திருமணமாகி ஓராண்டு நிறைவுற்றபோது, கிளவுதியாவுக்கு புற்றுநோய் இருந்ததெனத் தெரியவந்தது. அறுவைச் சிகிச்சை, கதிர்வீச்சு ஆகிய மருத்துவ முறைகளால், கிளவுதியா, தன் தலைமுடியை இழந்து, தோல் நிறம் மாறி, எடைகுறைந்து, மிகவும் துன்புற்றார். இறைவனைப் பற்றியும், துன்பங்கள் பற்றியும் பல கேள்விகள் கிளவுதியாவின் எண்ணங்களை ஆக்கிரமித்தன.

தன்னைக் காணவந்த நண்பர்கள் வழியே, தன் கேள்விகளுக்கு ஏதாவது தெளிவு கிடைக்கும் என்று கிளவுதியா காத்திருந்தார். அவரைக் காண வந்த ஒரு தியாக்கோன், "இதுபோன்ற துன்பங்கள் திடீரென வருவதில்லை. ஏதோ ஒரு தருணத்தில் நீ இறைவனின் திருவுளத்திற்கு எதிராகச் சென்றிருக்கிறாய். அதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்" என்று ஆலோசனை தந்தார்.

இன்னும் சில நாட்கள் சென்று, கிளவுதியாவுக்கு முன்பின் அறிமுகமில்லாத ஓர் இளம்பெண், அவரைக் காணவந்தார். கைநிறைய மலர்களைக் கொணர்ந்த அவர், கிளவுதியாவுடன் தங்கியிருந்த நேரம் முழுவதும், கலகலப்பாக சிரித்துப் பேசி, திருப்பாடல் வரிகளை, பாடல்களாகப் பாடிக் கொண்டிருந்தார். மலை முகடுகளையும், பள்ளத்தாக்குகளையும் உருவாக்கிய இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள் என்று பாடிக்கொண்டிருந்தார். அந்த இளம்பெண்ணின் பாடல், கிளவுதியா உட்பட, பலருக்கு தலைவலியைக் கொடுத்தது. அதற்குப்பின், அவ்விளம்பெண் அங்கு வரவேயில்லை; அவர் விட்டுச்சென்ற மலர்கள், காய்ந்து, உதிர்ந்து போயின.

அடுத்து வந்த மற்றொரு பெண், சில சிற்றேடுகளைக் கொணர்ந்தார். எவ்வேளையிலும், எல்லாச் சூழல்களிலும் இறைவனைப் புகழவேண்டும் என்ற கருத்தைச் சொல்லும் அந்த ஏடுகளை, கிளவுதியா வாசிக்கும்படி சொல்லிவிட்டு, அவர் சென்றார். இவர்களைத் தொடர்ந்து வந்த பங்கு அருள்பணியாளர், "இயேசுவின் பாடுகளோடு இணைவதற்கு, கிளவுதியா சிறப்பான அழைப்பை பெற்றுள்ளார்" என்று கூறினார்.

தன்னைச் சந்தித்தவர்கள் சொன்ன வெவ்வேறு கருத்துக்கள், கிளவுதியாவுக்கு அதிகம் உதவியாக இல்லை என்று, பிலிப் யான்சி அவர்கள், தன் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இதையொத்த ஒரு சூழலை, நாம் யோபு நூலில் காண்கிறோம். புரிந்துகொள்ள முடியாத புதிராக, யோபு அடைந்த துன்பங்களைப்பற்றி கேள்விப்பட்ட மூன்று நண்பர்கள், யோபாடு மேற்கொள்ளும் உரையாடலில் நாம் சென்ற வாரம் அடியெடுத்து வைத்தோம். இன்று, தொடர்கிறோம்.

பல வேளைகளில், நமக்கு ஏற்படும் துன்பங்களை நம்மால் தாங்கிக்கொள்ள முடிகிறது. நமக்கு மிக நெருங்கியவர்கள் துன்புறும்போது, அது, நம்மை கூடுதலாகப் பாதிக்கிறது. குறிப்பாக, அவர்களது துன்பத்தை, குறைக்கவோ, நீக்கவோ, வழிதெரியாமல் நாம் தவிக்கும்போது, நம் துன்பம் கூடுகிறது.

யோபின் நண்பர்கள் இவ்விதம் துன்புற்றனர். அடையாளம் காணமுடியாத அளவு உருக்குலைந்து போயிருந்த யோபின் நிலைகண்டு, நண்பர்களான, எலிப்பாசு, பில்தாது, சோப்பார் என்ற மூவரும் அதிகம் பாதிக்கப்பட்டனர். ஏழு நாட்கள் இரவும், பகலும் யோபுடன் அமர்ந்து, அவரது துன்பத்தில் பங்கேற்றபோது, தங்களால் எதுவும் செய்ய இயலாத நிலை, யோபைவிட கூடுதல் துயரத்தை அவர்களுக்கு வழங்கியிருக்க வேண்டும். தங்கள் துயரத்திற்கு ஒரு வடிகால்போல, தங்களுக்குத் தெரிந்த கருத்துக்களை அவர்கள் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தனர்.

அம்மூவருள் முதலில் பேசிய எலிப்பாசு, மனிதருக்கு வரும் துன்பங்கள் அவர்கள் செய்த தவறுகளின் விளைவாக வரும் தண்டனைகளே என்று, அழுத்தந்திருத்தமாக வழங்கிய தீர்ப்பையடுத்து, யோபு பேசுகிறார். 6 மற்றும் 7ம் பிரிவுகளில் யோபு கூறும் வார்த்தைகள், தன்னிலையை எண்ணி நொந்து அழும் வார்த்தைகளாகவும், நண்பர் கூறிய கருத்துக்களுக்கு பதில் தரும் வார்த்தைகளாகவும் மாறி, மாறி வருகின்றன. தான் பிறக்காமல் இருந்திருந்தால் நலமாக இருந்திருக்கும் என்று 3ம் பிரிவில் கூறிய யோபு, அதே பாணியில், தன்னை நொந்து, மீண்டும் பேசுகிறார்:

யோபு நூல் 6: 8-10

நான் ஏங்குவதை இறைவன் ஈந்திடமாட்டாரா? அவர் என்னை நசுக்கிவிடக்கூடாதா? தம் கையை நீட்டி எனைத் துண்டித்திடலாகாதா?அதுவே எனக்கு ஆறுதலாகும்; அழிக்கும் அல்லலிலும், அகமகிழ்வேன்; தொடரும் துயரிலும், துள்ளி மகிழ்வேன்; ஏனெனில் தூயவரின் சொற்களை மறுத்தேனில்லை.

தன்னை நேர்மையற்றவர் என்று கூறிய நண்பர் எலிப்பாசுவிடம், தான் இறைவனின் சொற்களை மறுக்கவோ, அவருக்கு எதிராக செயல்படவோ முயன்றதில்லை என்பதை தெளிவுபடுத்துகிறார், யோபு. பின்னர், தான் செய்த தவறு என்ன என்பதை சுட்டிக்காட்டும்படியும், தன் மீது கருணை காட்டும்படியும் கேட்கும் யோபு, 6ம் பிரிவின் இறுதியில், தான் குற்றமற்றவர், தன் பக்கம் இன்னும் நீதி உள்ளது என்று கூறி முடிக்கிறார்:

யோபு நூல் 6: 24-25, 28-29

அறிவு புகட்டுக! அமைதியடைவேன்; என்ன தவறிழைத்தேன்? எடுத்துக்காட்டுக! நேர்மையான சொற்கள் எத்துணை ஆற்றலுள்ளவை? ஆனால், நீர் மெய்ப்பிப்பது எதை மெய்ப்பிக்கிறது? என் வார்த்தைகளைக் கண்டிக்க எண்ணலாமா? ... பரிவாக இப்பொழுது என்னைப் பாருங்கள்; உங்கள் முகத்திற்கெதிரே உண்மையில் பொய் சொல்லேன், போதும் நிறுத்துங்கள்; அநீதி செய்ய வேண்டாம்! பொறுங்கள்! நீதி இன்னும் என் பக்கமே.

இதைத் தொடர்ந்து, 7ம் பிரிவின் ஆரம்பத்தில், மண்ணக வாழ்வே ஒரு போராட்டம் என்று யோபு விவரிக்கும் சொற்கள், கவிதை நயம் மிக்கவை. துன்பத்தில் சிக்கியிருக்கும் எந்த ஒரு மனிதரும் பயன்படுத்தக்கூடிய சொற்களாக, இவை, யோபின் உள்ளத்திலிருந்து வெடித்தெழுகின்றன:

யோபு 7: 1-4, 6-7

மண்ணில் வாழ்வது மனிதருக்குப் போரட்டந்தானே? அவர்களின் நாள்கள் கூலியாள்களின் நாள்களைப் போன்றவைதாமே? நிழலுக்கு ஏங்கும் அடிமை போலவும், கூலிக்குக் காத்திருக்கும் வேலையாள் போலவும், வெறுமையான திங்கள்கள் எனக்கு வாய்த்தன; இன்னல்மிகு இரவுகள் எனக்குப் பங்காயின. படுக்கும்போது எப்போது எழலாம் என்பேன்! இரவோ நீண்டிருக்கும்; விடியும்வரை புரண்டு உழல்வேன். என் நாள்கள் தறியின் ஓடுகட்டையினும் விரைந்தோடுகின்றன; அவை நம்பிக்கையின்றி முடிவடைகின்றன. என் உயிர் வெறுங்காற்றே என்பதை நினைவுகூருவீர்; என் கண்கள் மீண்டும் நன்மையைக் காணா.

இப்போது  நாம் கேட்ட இந்த வரிகளை நம்மில் பலர் பலவிதங்களில் சொல்லியிருக்கிறோம். துன்பங்கள் நம் வாழ்வை நிரப்பும்போது, நம்மிடமிருந்து முதலில் விடைபெறுவன, உணவும், உறக்கமும். இன்னல்மிகு இரவுகள் எனக்குப் பங்காயின. படுக்கும்போது எப்போது எழலாம் என்பேன்! இரவோ நீண்டிருக்கும்; விடியும்வரை புரண்டு உழல்வேன். என்ற யோபுவின் வார்த்தைகள் நமது உள்ளத்தின் உணர்வுகளை எதிரொலிப்பதாய் உள்ளன.

6 மற்றும் 7ம் பிரிவுகளில் யோபு, தன்னை நொந்தும், தன் நண்பருக்குப் பதிலாகவும் பேசிய வார்த்தைகளைத் தொடர்ந்து, அவர் இறைவனிடம் எழுப்பும் வேண்டுதல், நம் அடுத்தத் தேடலை வழிநடத்தும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.