2017-03-14 15:44:00

தென் சூடானில் அமைதிக்காக தேசிய செப நாள்


மார்ச்,14,2017. தென் சூடானில் போரை நிறுத்தவும், அரசுத் துருப்புகள், தங்களின் பணிக்கு ஏற்றபடி, நன்னடத்தையுடன் செயல்படவும், அந்நாட்டு அரசுத்தலைவர் Salva Kiir Mayardit அவர்கள் ஆவன செய்யுமாறு, அந்நாட்டு ஆயர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.

தென் சூடான் ஆயர் பேரவைத் தலைவர், ஆயர் Eduardo Hiiboro அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டை பிளவுபடாமல் காப்பதற்கு உதவும் தெளிவான நடவடிக்கைகளில், அரசுத்தலைவர் ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Yambio நகரில், இவ்வார இறுதியில், அமைதிக்காக நடைபெறும் தேசிய செப நிகழ்வில் அரசுத்தலைவர் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ள ஆயர் Hiiboro அவர்கள், இச்செபம், இக்காலத்திய தென் சூடான் மக்களுக்கு, வரலாற்று சிறப்புமிக்கதாகவும், அர்த்தமுள்ளதாகவும் அமைகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

தென் சூடான் மக்கள், பாவத்திற்காக மனம் வருந்தி, இனிமேல் பாவம் செய்ய மாட்டோம் என உறுதி எடுக்க வேண்டுமெனவும் கூறியுள்ள ஆயர், இனங்களுக்கிடையே உறவுகள், நீதி, மன்னிப்பு ஆகிய விவகாரங்களில், பொது மக்களுடன், திறந்த, மற்றும் நேர்மையான உரையாடல் இடம்பெற வேண்டுமென அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.