2017-03-14 15:28:00

இலங்கையில் சமய அவைகளுக்குப் பரிந்துரை


மார்ச்,14,2017. இலங்கையில் புதிய அரசியலமைப்பு பரிந்துரைக்கப்பட்டுள்ளவேளை, தேசிய ஒன்றிப்பு மற்றும், ஒப்புரவை மேம்படுத்துவதில் மதங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது என்று, அந்நாட்டின் கத்தோலிக்க ஆயர்கள் உட்பட, பல்சமயத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு நகரிலுள்ள மகா போதி கழகத்தின் மையத்தில் நடைபெற்ற சமயத் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய, கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள், மிக அதிகமாகத் துன்புற்றுள்ள தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில், சமயத் தலைவர்கள் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய புத்தமத துறவி, Bellanwila Wimalarathana Nayaka Thero அவர்கள், புதிய அரசியலமைப்பு, அரசியல் வட்டாரத்தில் ஒன்றிப்பு விதைகளை விதைக்கவுள்ளவேளை, ஒப்புரவு நடவடிக்கைகளில் அனைத்து மதத்தினரும், முக்கியமான அங்கம் வகிக்க வேண்டுமென்று கூறினார்.

இலங்கையில், தேசிய அளவில், ஒன்றிப்பு மற்றும், ஒப்புரவை ஊக்குவிப்பதற்கு, தாலூக்கா, மாவட்டம், தேசியம் என எல்லா நிலைகளிலும், சமய அவைகள் உருவாக்கப்பட வேண்டுமென்று பரிந்துரைப்பதாக, Bellanwila அவர்கள் மேலும் கூறினார்.

இப்பரிந்துரையை வரவேற்பதாகத் தெரிவித்த தேசிய ஒன்றிணைந்த வாழ்வு மற்றும், தேசிய மொழிகள் துறை அமைச்சர் மனோ கணேசன் அவர்கள், அமைச்சரவையில் இப்பரிந்துரையை, தான் சமர்ப்பிப்பதாக அறிவித்தார்.   

இலங்கையில் ஏறக்குறைய முப்பது ஆண்டுகளாக நடைபெற்ற சண்டை, 2009ம் ஆண்டில் முடிவுற்றது. 

ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.