2017-03-11 15:03:00

தவக்காலம் 2ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


எல் சால்வதோர் நாட்டில், இரத்தம் சிந்தி, கிறிஸ்துவுக்குச் சான்று பகர்ந்த இருவர், நம் ஞாயிறு சிந்தனையை இன்று துவக்கி வைக்கின்றனர் இவர்களில் ஒருவர், 1917ம் ஆண்டு பிறந்தார் என்பதால், இவரது பிறப்பின் முதல் நூற்றாண்டு நினைவு, உலகின் சில நாடுகளில், இவ்வாண்டு கொண்டாடப்படுகிறது. மற்றொருவர், சரியாக 40 ஆண்டுகளுக்கு முன், இதே நாள், அதாவது, 1977ம் ஆண்டு, மார்ச் 12ம் தேதி, எல் சால்வதோர் அரசின் கூலிப்படையால் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

48 வயதான இயேசுசபை அருள்பணியாளர், ருத்திலியோ கிராந்தே கார்சியா (Rutilio Grande García) அவர்கள், மார்ச் 12, மாலை 5 மணியளவில், தன் பணித்தள மக்களைச் சந்திக்க ஜீப்பில் சென்ற வேளையில், கூலிப்படையினரால் சூழப்பட்டு, 12 முறை சுடப்பட்டு, உயிரிழந்தார்.

1917ம் ஆண்டு பிறந்து, 1977ம் ஆண்டு, தன் 60வது வயதில், சான் சால்வதோர் பேராயராகப் பொறுப்பேற்ற, ஆஸ்கர் ரொமேரோ (Oscar Romero) அவர்கள், அருள்பணி ருத்திலியோ அவர்களின் நெருங்கிய நண்பர். எல் சால்வதோர் நாட்டில் நிகழும் அநீதிகளைக் குறித்து, இருவருக்கும் கடுமையான விவாதங்கள் நிகழ்வதுண்டு. இருப்பினும், இருவரும், இயேசுவின் நற்செய்தியை தங்களுக்கே உரிய வழிகளில் பின்பற்றி வந்தனர். ரொமேரோ அவர்கள், பேராயராகப் பொறுப்பேற்ற 18ம் நாள், அவரது நண்பர் அருள்பணி ருத்திலியோ அவர்கள், படுகொலை செய்யப்பட்டார். அதுவரை, தன் நாட்டில் நிகழ்ந்த அநீதிகளை, கண்டும் காணாமல், 'கோவில் காரியங்களில்' கவனம் செலுத்தி வந்த, பேராயர் ரொமேரோ அவர்கள், இந்தக் கொடூரக் கொலையால் மாற்றம் பெற்றார். நாட்டில் நிலவிய அநீதிகளை எதிர்த்து, குரல் கொடுக்கத் துணிந்தார்.

பேராயர் ரொமெரோ அவர்கள் எடுத்துரைத்த உண்மைகள், மிகவும் கசந்ததால், 1980ம் ஆண்டு, மார்ச் 24ம் தேதி, அவர் திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருந்தபோது, அரசின் கூலிப்படையைச் சேர்ந்த ஒருவர், குறிவைத்து சுட்ட குண்டு, பேராயரின் இதயத்தில் பாய்ந்தது. திருப்பலியை நிறைவு செய்யாமலேயே, உயிரிழந்தார், பேராயர் ரொமேரோ.

மார்ச் மாதத்தில், தவக்காலத்தில், கொல்லப்பட்ட இவ்விரு சாட்சிகளையும், எல் சால்வதோர் மக்கள், புனிதர்களென, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகக் கருதி வருகின்றனர். இவர்களில், பேராயர் ரொமேரோ அவர்கள், 2015ம் ஆண்டு, மே 23ம் தேதி, அருளாளராக உயர்த்தப்பட்டார். இறையடியாரான அருள்பணி ருத்திலியோ அவர்களும், விரைவில் மக்களின் வணக்கத்தைப் பெற பீடமேற்றப்படுவார் என்ற எதிர்பார்ப்புடன், எல் சால்வதோர் மக்கள் காத்திருக்கின்றனர்.

வறுமைப்பட்ட விவசாயக் குடும்பத்தில் பிறந்த ருத்திலியோ அவர்கள், தன் நாட்டு மக்கள், தங்களது வறுமையை, இறைவனின் திருவுளம் என்று ஏற்று வாழ்ந்ததைக் கண்டு மனம் வருந்தினார். நாட்டில் நிலவும் வறுமை, இறைவனின் திருவுளம் அல்ல, அது, ஒரு சிலரின் அநீதியால் உருவானது என்பதை, மக்களுக்கு உணர்த்திவந்தார். நாட்டில் நிலவும் அநீதிகளைப்பற்றி தான் உணர்ந்த உண்மையை, அச்சமின்றி பறைசாற்றினார். ஒருமுறை, எல் சால்வதோர் அரசுத் தலைவர், இராணுவ அதிகாரிகள் மற்றும் ஏனைய அரசு அதிகாரிகள் பங்கேற்ற ஒரு திருப்பலியில், "உருமாற்றம் பெறவேண்டும் என்று, நற்செய்தி விடுக்கும் அழைப்பினை, இந்நாட்டில், திருமுழுக்கு பெற்றுள்ள பலர், ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். மாற்றம் பெற அழைக்கும் இயேசுவின் நற்செய்தி என்ற வெள்ளம், தங்களை நெருங்கிவிடக் கூடாது என்ற குறிக்கோளுடன், இவர்கள், தன்னலம் எனும் பெரும் அணைகளை எழுப்பியுள்ளனர். இவர்களது தன்னலத்தை, திருஅவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர்" என்று, அருள்பணி ருத்திலியோ அவர்கள் வழங்கிய மறையுரை, அவரது மரணத்திற்கு நாள் குறித்தது. நற்செய்தி கொணரும் மாற்றத்தை ஏற்க மறுத்தது, எல் சால்வதோரின் ஆதிக்க வர்க்கம். மாற்றத்தைக் குறித்து நமது நிலை என்ன?

தவக்காலத்தின் உயிர்நாடியாக விளங்கும், மாற்றம், மனமாற்றம், உருமாற்றம் என்ற எண்ணங்களை அசைபோட இந்த ஞாயிறு வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன. உருக்குலைந்த இயேசுவை, சென்ற ஞாயிறு சந்தித்த நாம், உருமாறிய இயேசுவை, இந்த ஞாயிறு சந்திக்கிறோம். பாலை நிலத்தில், நாற்பது நாள் கடுந்தவம் மேற்கொண்ட இயேசு, உருகுலைந்திருந்த நேரத்தில், அவர், எவ்விதம் தன்னையே எளிதாக, விரைவாக, உருமாற்றிக்கொள்ள முடியும் என்ற குறுக்கு வழிகளை, சாத்தான் சொல்லித்தந்தது.

அந்த குறுக்கு வழிகளை ஏற்றுக்கொள்ளாத இயேசு, பாடுகள், மரணம் என்ற வேதனை நிறைந்த வழியில் தான் மாற்றம் பெறப்போவதாக தன் சீடர்களுக்கு சொல்கிறார். இயேசுவின் இந்தக் கூற்று, மத்தேயு நற்செய்தி 16ம் பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூற்றினால், அதிர்ச்சியடைந்து, மனம்தளர்ந்து போயிருந்த சீடர்களில் மூவருக்கு, உறுதி வழங்கும் வகையில் நிகழும் இயேசுவின் உருமாற்றம், மத்தேயு நற்செய்தி, 17ம் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

இயேசுவின் உருமாற்ற நிகழ்வு நமக்கு நற்செய்தியாக வழங்கப்பட்டுள்ள வேளையில், தொடக்க நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள முதல் வாசகமும் (தொடக்கநூல் 12 : 1-4) மாற்றத்தைப் பற்றி கூறுகிறது. தனக்குப் பழக்கமான ஓர் இடத்தைவிட்டு, பழக்கமில்லாத இடத்திற்குச் செல்லவேண்டிய மாற்றத்தை ஏற்க, ஆபிரகாம் அழைக்கப்பட்டார். மாற்றங்களை சந்திக்க, இளவயது பொருத்தமானது; வயது முதிர்ந்த காலத்தில், மாற்றங்கள் வரும்போது, அவற்றை ஏற்பதற்கு, பெரும் தயக்கம் நமக்குள் உருவாகும். தான் பிறந்துவளர்ந்த ஊரைவிட்டு, வேறோர் ஊருக்குச்செல்ல, ஆபிரகாம் அழைக்கப்பட்டபோது, அவருக்கு வயது 75. (தொ.நூ. 12:4)

ஆபிரகாமைவிட இன்னும் இரண்டு வயது கூடுதலாக, அதாவது, தன் 77வது வயதில், அர்ஜென்டினா நாட்டின் புவனஸ் அயிரெஸ்ஸில் (Buenos Aires) பிறந்து, அங்கேயேப் பேராயராகப் பணியாற்றிய, கர்தினால் ஹோர்கெ மாரியோ பெர்கோலியோ (Jorge Mario Bergoglio) அவர்கள், திருத்தந்தையாகப் பொறுப்பேற்க அழைக்கப்பட்டார். தன் பணிஒய்வைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில், கர்தினால் பெர்கோலியோ அவர்கள் பெற்ற இந்த அழைப்பு, மாற்றங்களை வலியுறுத்தும் தவக்காலத்தின்போது நிகழ்ந்தது என்பது, குறிப்பிடத்தக்கது.

மார்ச் 13, திங்களன்று, திருஅவையின் தலைமைப் பணியில் தன் 4ம் ஆண்டை நிறைவு செய்யும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மாற்றங்களைப்பற்றி ஒருசில பாடங்களைச் சொல்லித்தந்துள்ளார். அவர், திருஅவையில் மாற்றங்களைக் கொணர்வார் என்ற எதிர்பார்ப்பிற்கு, அவர் அவ்வப்போது அளித்துவரும் பதில் இதுதான்: "திருஅவையில் மாற்றங்கள் உருவாக, ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட முறையில் மாற்றங்கள் நிகழவேண்டும்" என்ற கருத்தை அவர் வலியுறுத்தி வருகிறார். தனிப்பட்ட மனிதர் என்ற முறையில், அவர், இதுவரை கொணர்ந்துள்ள மாற்றங்கள், நம் அனைவருக்கும் ஓர் உந்துசக்தியாய் அமைந்துள்ளன.

கடந்த நான்காண்டுகளாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சொன்னவை, செய்தவை பலவும், அவர் ஒரு மனிதப்பிறவி என்பதை, நம் மனதில் ஆணித்தரமாகப் பதித்துள்ளன.

அவர் வாழ்ந்துவரும் சாந்தா மார்த்தா இல்ல குழுமத்தில், தன் உணவை தானே பரிமாறிக்கொண்டு, மற்றவருடன் உண்பது...
எதிர்பாராத வகையில் தொலைபேசியில் பலரை அழைத்து, ஆனந்த அதிர்ச்சி அளித்துவருவது...
பங்குத்தளங்களிலும், புனித பேதுரு பசிலிக்கா வளாகத்திலும், மக்களைச் சந்திக்கும்போது, குழந்தைகளையும், நோயுற்றோரையும் பரிவோடு அணைத்து முத்தமிடுவது...
பாதுகாப்பைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் மக்களைச் சென்று சந்திப்பது...
தானும் ஒரு சாதாரண மனிதன், ஒரு பாவி என்றும், தன்னையும் தனிமை, வெறுமை, ஐயங்கள் ஆகியவை வாட்டுகின்றன என்றும் ஊடகங்களுக்கு வழங்கும் நேர்காணல்களில் கூறுவது... என்று...

நீண்டுசெல்லும் இப்பட்டியலில், நாம், மீண்டும், மீண்டும், காண்பது ஒரே ஒரு மாற்றம்தான்... திருத்தந்தை என்பவர், வெகு, எளிதாக தொட்டுவிடக்கூடிய ஒரு சாதாரண மனிதர் என்பதை நிலைநாட்டும் அர்த்தமுள்ள ஒரு மாற்றம்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தலைமைப் பணியில் நீடிக்கும் காலத்தில், பெரும் சாதனைகள் எதையும் ஆற்றாமல் போனாலும் கவலையில்லை. திருஅவையின் தலைவர், ஏனைய மனிதர்களைப்போல், ஒரு சாதாரண மனிதர்தான் என்ற உண்மையை, அவர், மக்கள் மனங்களில் ஆழப்பதித்தால், அதுவே, ஒரு பெரும் சாதனைதான்.

திருத்தந்தையே ஒரு சாதாரண மனிதர்தான் என்பதை, இவ்வுலக மக்கள், குறிப்பாக, கத்தோலிக்க மக்கள் புரிந்துகொண்டால், திருஅவையில் ஆரோக்கியமான மாற்றங்கள் உருவாகும். அருள்பணியாளர், ஆயர், பேராயர், கர்தினால், திருத்தந்தை என்று, பணி நிலைகள் உயர, உயர, அந்நிலைகளை அடைவோரைச் சுற்றி சுவர்களை எழுப்பி, அவர்களை, எட்டாத உயரத்தில் பீடமேற்றும் பழக்கங்கள் மாறும்போது, அச்சுவர்கள் வீழும்போது, திருஅவை, இன்னும் நலமுள்ள ஓர் இயக்கமாக மாறும். இதைத்தான், போர்க்களத்தில் பணியாற்றும் மருத்துவமனை போன்ற உருவகங்களால், திருத்தந்தை பேசி வருகிறார்.

உலகக் கவனத்தை ஈர்க்க, இயேசு தன் தோற்றத்தை மாற்றவேண்டும் என்று அலகை தூண்டியதை சென்றவாரம் சிந்தித்தோம். அலகையின் யோசனையைப் பின்பற்றி, இயேசு எருசலேம் கோவிலிலிருந்து குதித்திருந்தால், யூதர்கள் மத்தியில், உரோமையர்கள் மத்தியில் பரபரப்பான மாற்றங்களை உருவாக்கியிருப்பார். அத்தகைய மாற்றங்களை விரும்பாத இயேசு, தன் மூன்று சீடர்களுக்கு முன் உருமாற்றம் பெறுகிறார் என்று, இந்த வார நற்செய்தி சொல்கிறது. இந்த மாற்றம், சீடர்களின் உள்ளங்களில் நலமிக்க மாற்றங்களைக் கொணரும் என்ற நம்பிக்கையில், இயேசு, உருமாற்றம் என்ற அருளை, சீடர்களுக்கு வழங்குகிறார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களது நான்கு ஆண்டுகள் பணிவாழ்வில், ஊடகங்களின் கவனத்தைக் கவர்ந்த பல மாற்றங்கள், வெளிப்படையாக உருவாகியுள்ளன. அதேநேரம், விளம்பரங்கள் ஏதுமில்லாத மாற்றங்கள் பலவற்றிற்கும் அவர் காரணமாக இருந்தார். இவற்றை, முக்கியமான மாற்றங்களாக நாம் எண்ணிப்பார்க்கலாம். பல ஆண்டுகளாகக் கோவில் பக்கமே செல்லாத கிறிஸ்தவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமைப் பணியை ஏற்ற ஒரு சில வாரங்களில், கோவிலுக்குத் திரும்பியுள்ளனர் என்பது, அதிகம் விளம்பரம் ஆகாத ஓர் உண்மை.

திருத்தந்தை அவர்களின் எளிமையான பணிவாழ்வால், திருஅவைத் தலைவர்களைப் பற்றி, மக்களின் பார்வை, தெளிவு பெற்றுள்ளது என்பது, வரவேற்கத்தக்க ஒரு மாற்றம். தலைவர்கள் என்று தங்களையே எண்ணிவந்தவர்கள், இன்று தங்களை, திருஅவையின் பணியாளர்கள் என்று சிந்திக்க முயற்சி செய்து வருகின்றனர்.

திருஅவைப் பணியாளர்களின் உறைவிடங்கள், உடைகள், பயன்படுத்தும் வாகனங்கள், சாதனங்கள், மாற்றம் பெறவேண்டும் என்ற எண்ணங்கள், மக்கள் மத்தியில் வலுவடைந்து வருகின்றன. ஒரு சில நாடுகளில், ஆயர்கள், தங்கள் இல்லங்களை அழகுபடுத்த செய்த செலவைப்பற்றி, மக்கள் கேள்விகள் எழுப்பிள்ளனர். இவை யாவும், வரவேற்கத்தக்க மாற்றங்கள். மக்கள் மத்தியில் உருவாகிவரும் இந்த மாற்றங்கள் தொடரும் என்று நம்பிக்கை கொள்வோம்.

வத்திக்கான் என்ற நீர்நிலையில் திருத்தந்தை பிரான்சிஸ் வடிவத்தில் விழுந்த ஒரு கல், அலைகளை உருவாக்கி வருகின்றது என்பது ஆனந்தம் தரும் நற்செய்தி. அலைகள் ஒரு நேர்கோடாகச் செல்வதில்லை; வளைவுகளாய், மேலும், கீழுமாய் நகர்கின்றன. மேலிருக்கும் புள்ளி கீழாகவும், கீழிருக்கும் புள்ளி மேலாகவும் நகர்வது, அலைகளின் அழகு. ஓரிடத்தில் நின்றுவிடாமலும், பின்னோக்கிச் செல்லாமலும், தொடர்ந்து முன்னேறுவதும் அலைகளின் மற்றோர் அழகு. "திருத்தந்தை பிரான்சிஸ் அலை" இன்னும் பல ஆண்டுகள், நலமிக்க மாற்றங்களை, திருஅவையிலும், இவ்வுலகிலும், உருவாக்கவேண்டும் என்று, இறைவனை இறைஞ்சுவோம்.

தன் உருமாற்றத்திற்குப் பிறகு, இயேசு தன் சீடர்களுக்கு விடுத்த அழைப்பு: "எழுந்திருங்கள். அஞ்சாதீர்கள்." தாங்கள் கண்ட அதிசயக் காட்சியிலிருந்து அவர்கள் எழுந்து, மலையைவிட்டு இறங்கினர். அடுத்தநாள் பிரச்சனைகளைச் சந்திக்கத் துணிந்தனர். இயேசுவும், மகிமையின் உச்சத்தில், உருமாற்றம் பெற்ற மலையைவிட்டு இறங்கி, கல்வாரி என்ற மற்றொரு மலை மீது ஏறத் துணிந்தார். அந்த மலை மீது அவர் மீண்டும் தன்னையே உருகுலைத்ததால், நாம் உருமாற்றம் பெறுவதற்கு வழி வகுத்தார்.

நம் தனிப்பட்ட வாழ்விலும், கத்தோலிக்கத் திருஅவையிலும், கிறிஸ்தவர்கள் மத்தியிலும், மனித சமுதாயத்திலும் மாற்றங்களை உருவாக்க, முதலில் நம்மிடம் மாற்றங்களை உருவாக்குவோம். இந்த மாற்றங்களுக்கு அடித்தளமாக, நாம் ஏறி நிற்கும் மமதை மலையிலிருந்து இறங்குவோம். நம்முன் மலைபோல் குவிந்திருக்கும் பிரச்சனைகளைக் கண்டு மலைத்துவிடாமல், நம்பிக்கையோடு, நலமிக்க மாற்றங்களைத் துவக்குவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.