2017-03-10 15:10:00

ஊடகத்துறை சந்திப்புக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கட்டும்


மார்ச்,10,2017. ஊடகத்துறையில் பணியாற்றுகின்றவர்கள், ஒப்புரவு மற்றும், சந்திப்பு  கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் கருவிகளாகச் செயல்படுமாறு, ஊடக சுதந்திரம் என்ற தலைப்பில் நடைபெற்ற ஐரோப்பிய கூட்டமொன்றில் திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், கேட்டுக்கொண்டார்.

OSCE என்ற, ஐரோப்பிய பாதுகாப்பும் ஒத்துழைப்பும் என்ற நிறுவனத்தில் திருப்பீடத்தின் நிரந்தரப் பிரதிநிதியாகப் பணியாற்றும், பேரருள்திரு Janusz Urbanczyk அவர்கள், அந்நிறுவனம் நடத்திய 1136வது கூட்டத்தில், ஊடக சுதந்திரம் பற்றி உரையாற்றுகையில், 2016ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஊடகத்துறையினருக்கு ஆற்றிய உரையிலிருந்து மேற்கோள் காட்டிப் பேசினார்.

ஊடகத் துறையினர் உட்பட, எல்லாருக்குமே வாழ்வு எப்பொழுதும் எளிதாக அமைவதில்லை எனவும், ஆயுத மோதல்கள் போன்ற கடினமான சூழல்கள் பற்றி செய்திகள் கொடுக்கும்போது, ஊடகத் துறையினர் சவால்களை எதிர்கொள்கின்றனர் எனவும், இக்கூட்டத்தில் கூறினார், பேரருள்திரு Urbanczyk.

ஊடகங்களில்  பணியாற்றுகின்றவர்கள், பொதுநலனைக் கட்டியெழுப்புவதற்கும், ஒப்புரவுப் பாதையை ஊக்குவிப்பதற்கும் உதவுகின்றவர்களாகப் பணியாற்றுமாறு திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளதை, OSCE கூட்டத்தில் குறிப்பிட்டுப் பேசினார், பேரருள்திரு Urbanczyk.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.