2017-03-09 15:21:00

"வாழ்வில் வெறுமையை உணர்ந்த நேரங்கள் உண்டு" - திருத்தந்தை


மார்ச்,09,2017. "என் வாழ்விலும் வெறுமையை உணர்ந்த நேரங்கள் உண்டு, ஆன்மீக வாழ்வில் இருள் சூழ்ந்த நேரங்களும், 'இறைவா, இது எனக்குப் புரியவில்லை' என்று சொன்ன நேரங்களும் இருந்ததுண்டு" என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஜெர்மன் மொழியில் வெளியாகும் Die Zeit என்ற வார இதழுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய ஒரு பேட்டி, மார்ச் 9, இவ்வியாழனன்று வெளியிடப்பட்டது.

இவ்விதழின் தலைமை ஆசிரியர், Giovanni di Lorenzo அவர்களுடன் மேற்கொண்ட ஓர் உரையாடலில், தனக்கும் ஐயங்கள் எழுகின்றன என்று திருத்தந்தை கூறியுள்ளது, இந்தப் பேட்டியின் வெளிப்படைத்தன்மையை விளக்குவதாக அமைந்தது.

முடிச்சுக்களை அவிழ்க்கும் அன்னை மரியாவிடம் தான் கொண்டுள்ள பற்று, இறை அழைத்தல்களில் வெளிப்படும் இக்கட்டான நிலைகள், மனிதர்களிடம் விளங்கும் நன்மை, தீமை என்ற பல்வேறு கருத்துக்களில் திருத்தந்தையின் நேர்காணல் இடம்பெற்றுள்ளது.

உலகின் பல பகுதிகளில், சிறு, சிறு துண்டுகளாக நிகழும் 'மூன்றாம் உலகப் போரை'க் குறித்து, இந்தப் பேட்டியில் மீண்டும் பேசியத் திருத்தந்தை, ஆப்ரிக்கா, உக்ரைன், ஆசியா, ஈராக் ஆகிய பகுதிகளில் நிகழும் மோதல்களைக் குறித்து கவலை வெளியிட்டார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு எதிராக அண்மையில் எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்து கேள்வி எழுந்தபோது, தன் கருத்துக்களுக்கு எதிர்ப்புக்கள் எழும் என்பதை, தான் திருத்தந்தையாகத் தெரிவு செய்யப்பட்ட நேரத்திலிருந்து, தான் முழுமையாக உணர்த்திருந்ததாகவும், அவை தன்னை அதிகம் பாதிக்காமல், தான் அமைதியில் உறங்கச் செல்வதாகவும் அவர் கூறினார்.

வாழ்வை, நகைச்சுவை உணர்வோடு எதிர்கொள்ளும் பக்குவம் வேண்டும் என்று செபித்த புனித தாமஸ் மோர் அவர்களைப் போல தானும், இந்த வரத்திற்காக ஒவ்வொரு நாளும் செபிப்பதாக, திருத்தந்தை அவர்கள் இந்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்துவரும் மாதங்களில் தான் மேற்கொள்ளவிருக்கும் பயணங்கள் பற்றி குறிப்பிட்டத் திருத்தந்தை, பாத்திமா திருத்தலத்திற்கும், இந்தியா, பங்களாதேஷ், கொலம்பியா ஆகிய நாடுகளுக்கும் செல்வது, ஓரளவு உறுதியாக உள்ளது என்றும், தென் சூடான் நாட்டுக்குச் செல்வது, உறுதியாக இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.