2017-03-09 13:43:00

தவக்கால சிந்தனை : நம்மிடையே சமாதானம்


ஊருக்குத்தான் உபதேசம் என்ற சொல் வழக்கு நாம் அனைவரும் அறிந்ததே. அன்பு, சமாதானம், சகோதரத்துவம், அமைதி போன்றவற்றை, பிறருக்கு நம்மால் எளிதில் சொல்லித்தர முடியும். மறையுரைக்கும் அது வெகு எளிது. ஆனால், அதை வாழ்ந்து பார்த்தல், கடினம். திருப்பலியில் கூறும் பொய் சமாதானங்கள் மட்டும், நம்மை, நல்ல கிறிஸ்தவர்களாக மாற்றிவிட முடியாது. உங்களுக்குள் மனத்தாங்கல் இருந்தால், அதை சரிசெய்து, பின், காணிக்கை செலுத்த வரும்படி இன்று, இயேசு, அறிவுறுத்துகின்றார் (மத்.5,20-26). எல்லாரும் நல்லா இருக்கணும் என்பது, எல்லாருக்கும் இருக்கும் ஒரு ஆசை. ஆனால், நடைமுறையில், பல நேரங்களில், அது சாத்தியமா என்பது, கேள்விக்குறி. சமாதானத்தை வளர்க்கவேண்டிய ஆலயமே, சில நேரங்களில், சண்டைக்குக் காரணமாகிறது. சகோதரத்துவத்தை வலியுறுத்தி மறையுரை தரும் அருள்பணியாளருக்கு, மக்களோடு மனத்தாங்கல். அடுத்த குடும்பத்திற்கு அறிவுரை கூறும் கணவன், மனைவி, தங்களுக்குள் பேசிக்கொள்வதில்லை. கிறிஸ்தவ ஒன்றிப்பில், சாதிப் பாகுபாடுகள். இவை எல்லாம் நாம் நடைமுறையில், நம் வாழ்வில் கண்கூடாக பார்ப்பது. வெறும் சாம்பலை மட்டும் பூசிக்கொள்வதில் இல்லை தவக்காலம், நம் மனங்களில் படிந்திருக்கும் சாம்பலைத் துடைக்க, சகோதரத்துவம் என்ற அன்புத் தீ, தொடர்ந்து சுடர் விட, அது மற்றவர்களுக்கும் பரவிட, இந்த தவக்காலம் நமக்கு ஒரு அருமையான வாய்ப்பு.

“உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது” என்று, நாம், மற்றவர்களுக்குச் சொல்வதை விட,  நாம் வாழ்ந்து, மற்றவர் மனம் குளிர அன்பைப் பரிமாறிக்கொள்வோம்.

நம்மிடையே சமாதானம்! (அ.சகோ. இராஜசேகரன் சே.ச.)

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.