2017-03-08 15:27:00

யூதாசும், 'இரத்த நிலமும்' – திருத்தந்தையின் ஆண்டு தியானம்


மார்ச்,08,2017. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், திருப்பீட உயர் அதிகாரிகளும் மேற்கொண்டுள்ள ஆண்டு தியானத்தின் நான்காம் நாளான இப்புதனன்று, காலை, மத்தேயு நற்செய்தி 27ம் பிரிவின் முதல் பத்து இறைச்சொற்றொடர்களை மையப்படுத்தி தியான உரை வழங்கப்பட்டது.

பிரான்சிஸ்கன் சபையைச் சேர்ந்த அருள்பணி ஜூலியோ மிக்கேலினி அவர்கள் வழங்கிய தியான உரையில், இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாசு குறித்தும், அவர் தற்கொலை செய்துகொண்ட 'இரத்த நிலம்' குறித்தும் சிந்தனைகள் பகிர்ந்துகொள்ளப் பட்டன.

மேலும், மார்ச் 7, இச்செவ்வாய் மாலை, இயேசு கெத்சமனித் தோட்டத்தில் மேற்கொண்ட செபங்களையும், அவர் அங்கு கைது செய்யப்பட்டதையும் மையப்படுத்தி, தியானச் சிந்தனைகள் வழங்கப்பட்டன.

உரோம் நகருக்கு அருகே அரிச்சா எனுமிடத்தில் அமைந்துள்ள தெய்வீகப் போதகர் தியான இல்லத்தில் கடந்த ஞாயிறு மாலை துவங்கிய தியானம், இவ்வெள்ளி மதியம் நிறைவு பெறும்.

இதற்கிடையே, மார்ச் 12, வருகிற ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரில் அமைந்துள்ள Santa Maddalena di Canossa என்ற பங்குத்தளத்திற்கு மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்வார் என்று, உரோம் மறைமாவட்டம் அறிவித்துள்ளது.

ஞாயிறு மாலை 4 மணிக்கு இப்பங்குத்தளத்திற்குச் செல்லும் திருத்தந்தை, அங்குள்ள இளையோரையும், நோயுற்றோரையும் தனித்தனியே சந்தித்தபின், சில மணித்துளிகள் ஒப்புரவு அருளடையாளம் வழங்குவார் என்றும், பின்னர் திருப்பலி நிறைவேற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.