2017-03-08 15:44:00

மரண தண்டனை சட்டமாவதற்கு எதிராக பிலிப்பீன்ஸ் ஆயர்கள்


மார்ச்,08,2017. மனித உயிர், இறைவன் வழங்கிய கொடை என்பதால், அதை அழிக்க முயலும் முயற்சிகளான, கருக்கலைப்பு, மனித வர்த்தகம், மரண தண்டனை என்ற அனைத்தையும் கத்தோலிக்கத் திருஅவை முழு வலிமையோடு எதிர்த்துவருகிறது என்று, பிலிப்பீன்ஸ் நாட்டு கர்தினால், லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் கூறினார்.

மரண தண்டனையை மீண்டும் நடைமுறைக்குக் கொணரும் நோக்கத்துடன், பிலிப்பீன்ஸ் பாராளுமன்றத்தில் வாதங்களும், வாக்கெடுப்பும் நிகழும் இன்றைய நாட்களில், அந்த முயற்சியை முறியடிக்க, மனசாட்சியுள்ள அரசியல்வாதிகள் முன்வரவேண்டும் என்று, பிலிப்பீன்ஸ் ஆயர்கள் குரல் எழுப்பி வருவதாக, வத்திக்கான் நாளிதழ் L’Osservatore Romano கூறியுள்ளது.

மனமாற்றத்திற்கு அழைப்பு விடுக்கும் தவக்காலத்தில், வாழ்வை உறுதி செய்வதற்கு பதில், சாவை நோக்கி மனம் மாறியுள்ள அரசியல் தலைவர்களின் போக்கு அதிர்ச்சியைத் தருகிறது என்று, லீப்பா பேராயர், இரமோன் ஆர்குவேயெஸ் (Ramon C. Arguelles) அவர்கள் கூறினார்.

கத்தோலிக்கத் திருஅவை பொதுவாக அரசியல் விடயங்களில் ஈடுபடுவதில்லை எனினும், மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு ஆபத்து எழும்போது, திருஅவை தன் குரலை எழுப்பவேண்டும் என்பதை உணர்ந்துள்ளது என்று, பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவையின் சார்பில் பேசிய அருள்பணி ஜெரோம் சேச்சியானோ (Jerome Secillano) அவர்கள், எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.