2017-03-08 15:56:00

குரவேசியாவில் உலகிலேயே மிகப்பெரிய அன்னை மரியா உருவச்சிலை


மார்ச்,08,2017. குரவேசியா நாட்டின் Primošten என்ற நகரில் நிறுவப்படவிருக்கும் அன்னை மரியாவின் திரு உருவம், உலகிலேயே மிகப் பெரிய உருவச் சிலையாக அமையும் என்று, அந்நகராட்சி அறிவித்துள்ளதென CNA கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

திருப்பீடமும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் ஆதரவு அளித்து, ஆசீர் வழங்கியுள்ள இந்த முயற்சியால் நிறுவப்படும் இந்த உருவச் சிலை, 55 அடி உயரம் கொண்டதென்றும், வானம் தெளிவாக உள்ள நாள்களில், இந்த உருவச் சிலையை, இத்தாலி நாட்டிலிருந்தும் பார்க்க முடியும் என்றும், Primošten நகராட்சி அறிவித்துள்ளது.

குரவேசியா நாட்டின் கடற்கரையையொட்டிய மலைத்தொடரில் அமைந்துள்ள Primošten நகரில், இத்தாலிய நாட்டின் Cammini Lauretani என்ற நிறுவனத்தின் உதவியுடன், நிறுவப்படும் இந்த உருவச் சிலை, லொரேட்டோ அன்னை மரியாவின் சிலை என்றும், இந்நகரில், ஒவ்வோர் ஆண்டும், அன்னையின் விழா, மே மாதம் 9,10 தேதிகளில் சிறப்பிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

அன்னையின் உருவச்சிலை நிறுவப்படும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதென்று கூறும் Primošten நகராட்சி, அன்னையின் திரு உருவ திறப்பு நிகழ்வுக்கென இன்னும் தேதியை உறுதி செய்யவில்லை என்று, CNA செய்தி கூறுகிறது. 

ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.