2017-03-07 16:27:00

மாசடைந்த சுற்றுச்சூழலால் ஆண்டுக்கு 17 இலட்சம் சிறார் மரணம்


மார்ச்,07,2017. உலகில் இடம்பெறும் ஐந்து வயதுக்குட்பட்ட சிறார் இறப்பில் 25 விழுக்காட்டிற்கு, மாசு கேடடைந்த சுற்றுச்சூழலே காரணம் என்று, WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனத்தின் இரண்டு புதிய அறிக்கைகள் கூறுகின்றன.     

புகை, அல்ட்ரா வைலட் கதிர்வீச்சு, சுத்தமற்ற நீர், மின்னணு கழிவுகள் போன்றவற்றால் மாசடையும் சுற்றுச்சூழலால், ஒவ்வோர் ஆண்டும் ஐந்து வயதுக்குட்பட்ட 17 இலட்சம் சிறார் இறக்கின்றனர் என்று அவ்வறிக்கைகள் கூறுகின்றன.

மாசு கேடடைந்த சுற்றுச்சூழல், மரணத்தை வருவிக்கக்கூடியது, குறிப்பாக, இளம் சிறாரின் வளரும் உறுப்புக்களையும், நோய் எதிர்ப்புச் சக்தியையும் பாதிக்கின்றன என்றும், அவ்வறிக்கைகள் எச்சரிக்கின்றன.

அதிகரித்துவரும் மின்சார மற்றும் மின்னணு கழிவுகள் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பாதிப்பு, சிறாரின் நலவாழ்வுக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றுரைக்கும் WHO நிறுவனம், காற்று மாசடைவதைக் குறைக்கவும், சுத்தமான நீர் பாதுகாப்பை அதிகரிக்கவும், கர்ப்பிணிப் பெண்களைப் பாதுகாக்கவும், உலகளவில், நடவடிக்கைகள் அவசியம் எனக் கூறியுள்ளது.

தற்போதைய மின்சார மற்றும் மின்னணு கழிவுகளின் அளவைப் பார்க்கும்போது, இவை, 2018ம் ஆண்டில் 5 கோடி மெட்ரிக் டன் அளவை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : UN  / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.