2017-03-07 15:46:00

திருப்பீடத்தின் 2015ம் ஆண்டின் வரவு செலவு


மார்ச்,07,2017. திருப்பீடத்தின் 2015ம் ஆண்டின் நிதி நிலைமையில், ஒரு கோடியே 24 இலட்சம் யூரோக்கள் பற்றாக்குறை ஏற்பட்டிருந்தாலும், வரவு செலவை நிர்வகிக்கும் முறையிலும், பொருளாதாரச் சீர்திருத்தத்தை அமல்படுத்துவதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டுள்ளது என, திருப்பீடம் வெளியிட்ட அறிக்கை கூறியது.

2015ம் ஆண்டின் நிதி நிலைமை குறித்து திருப்பீட பொருளாதாரச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொருளாதாரச் சீர்திருத்தத்தில், இடம்பெற்றுள்ள புதிய கொள்கைகளின்படி செயல்படுவதில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, வத்திக்கான் நகர நாடு வெளியிட்ட தனிப்பட்ட வரவு செலவு அறிக்கையில், 2015ம் ஆண்டில், 5 கோடியே 99 இலட்சம் யூரோக்கள் மிஞ்சி இருப்பதாகவும், இதற்கு, வத்திக்கான் அருங்காட்சியகத்தோடு தொடர்புடைய செயல்பாடுகள் உட்பட, கலாச்சார நடவடிக்கைகள் வழியாகக் கிடைத்த வருவாயே  காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கும் இருக்கின்ற மறைமாவட்டங்கள் வழங்கும் நிதியுதவி மற்றும், முதலீடுகளிலிருந்து கிடைக்கும் பணமே, திருப்பீடத்திற்கு முக்கிய வருவாயை அளிக்கின்றது எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், இவ்வாண்டில், முதல் முறையாக, 2017ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.