2017-03-07 14:47:00

தவக்காலச் சிந்தனை: மனம் திரும்பு மனிதா


கடவுளின் பார்வையும், வழிகளும் மனித எண்ணத்திற்கு அப்பாற்பட்டவை என்பதை உணர்த்தும் முதல் வாசகத்தில், யோனாவின் பார்வையோடு நம் பார்வைகளை ஒன்று படுத்தி,  நம்மை செம்மைப்படுத்தும் நாள் இன்று என இறைவன் நமக்கு உணர்த்துகின்றார். ஆம்! யோனாவின் பார்வையானது, இறை வழியிலிருந்து விலகிச் செல்ல முயற்சித்தது. நினிவே மக்கள், தீயவர்கள், தண்டனைக்கு உரியவர்கள் என்று குற்றப்பழி சுமத்தும் பார்வையாக இருந்தது.

நாமும் இறைவழிகளுக்கு கதவை அடைத்துவிட்டு, நம் சுக வழிகளுக்கு பாதை இடுகிறோம். நம் குற்றங்களை மறைத்து, பிறரை, பல நேரங்களில், தண்டனைக்கு உரியவர்களென நம் மனங்களில் தீர்ப்பிடுகிறோம். ஆனால், இறைவன்  பார்வையில், மனம் திரும்புபவர் எவரும், இறையருள் பெறுகிறார், புது வாழ்வு வாழ்கிறார் என்பதற்கு, நினிவே மக்களின் மனமாற்றம் நமக்கொரு சான்று. அவன் சரியில்லை, அவள் நடத்தை சரி இல்லை என கை காட்டுவதற்கு முன், நாம் இறைவழியில் நடக்கிறோமா என இன்றைய நாளில் சரி பார்ப்போம். தவறி இருந்தால், இந்த தவக்காலத்தில், மனம் மாறுவோம்.

மனமாற்றம் பெறுவதற்கு, சாக்கு உடை உடுத்தவேண்டிய அவசியம் இல்லை, சாதாரண உடைகளில் மனமாற்றம் பெற முயல்வோம். உறுதியான, உண்மையான மனமாற்றத்தை ஆண்டவர் அறிகிறார். அதற்குத் தகுந்த அருளைத் தருகிறார். போலிவேடதாரிகள், பரிசேயர் போன்று நடிப்போரை, இறைவன் வெறுக்கிறார் என்ற நற்செய்தியும் நம் மனங்களில் பதியட்டும்.

மனம், திரும்புவோம், தவக்கோலத்தில் அல்ல, தவக்காலத்தில். - அருள்சகோதரர் இராஜசேகரன் சே.ச.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.