2017-03-07 16:18:00

உலக பெண்கள் தினம் மார்ச் 08


மார்ச்,07,2017. “மாற்றம் அடைந்து வருகின்ற தொழில் உலகில் பெண்கள்” என்ற தலைப்பில், உலக பெண்கள் தினம், மார்ச் 8 இப்புதனன்று கடைப்பிடிக்கப்படுகின்றது.

இந்நாளுக்கென செய்தி வெளியிட்டுள்ள, ஐ.நா.வின். பெண்கள் அமைப்பின் இயக்குனர் Phumzile Mlambo-Ngcuka அவர்கள், சிறுமிகளும், அன்னையரும் தங்களின் குடும்பங்களை நிர்வகிப்பதற்காக, நிறையத் தியாகங்களை ஆற்றிவரும்வேளை, பெண்களுக்கென வித்தியாசமான ஒரு தொழில் உலகை உருவாக்க விரும்புகின்றோம் என்று கூறியுள்ளார். 

பெண்களும், சிறுமிகளும், டிஜிட்டல் உலகில், புரட்சியின் ஓர் அங்கமாகச் செயல்பட தயாராக இருக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ள Phumzile அவர்கள், பொருளாதார வாழ்வில் பெண்களின் பங்கை ஊக்குவித்தல் உட்பட எல்லாத் துறைகளிலும், பெண்களின் பங்கேற்பை அதிகரித்தால், 2025ம் ஆண்டுக்குள், உலகளாவிய உற்பத்தி 12 டிரில்லியன் டாலரை எட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போது டிஜிட்டல் தொழிற்சாலைகளில், 25 விழுக்காட்டுப் பெண்களே வேலை செய்கின்றனர் என்றும், உலகில், ஆண்-பெண் ஊதிய வித்தியாசம் 23 விழுக்காடாக உள்ளது என்றும், கூறியுள்ளார் Phumzile .

ஆதாரம் : UN/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.