2017-03-07 15:35:00

இயேசுவின் இறுதி இரவு உணவில் ஒன்றிப்பு


மார்ச்,07,2017. ஒருவர், மற்றவர்களோடு சேர்ந்து உணவுண்பது, தானும் படைப்புயிர் என்பதை பிறர் முன்னிலையில் வெளிப்படுத்துவதாகும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ், மற்றும், திருப்பீட உயர் அதிகாரிகளுக்கு, தியானச் சிந்தனைகளை வழங்கும் அருள்பணியாளர் இச்செவ்வாயன்று கூறினார்.

அரிச்சா தெய்வீகப் போதகர் தியான இல்லத்தில் திருத்தந்தைக்கும், திருப்பீட உயர் அதிகாரிகளுக்கும், தியானச் சிந்தனைகளை வழங்கி வரும் அருள்பணி ஜூலியோ மிக்கேலினி அவர்கள், இயேசுவின் இறுதி இரவு உணவு பற்றி விளக்கிய தியான உரையில், இவ்வாறு கூறினார்.

உணவு உண்பது, மனிதரின் உடலுக்குத் தேவையான ஒன்று எனவும் உரைத்த அருள்பணி மிக்கேலினி அவர்கள், இயேசு தம் இறுதி இரவு உணவு உண்ட அதே இரவில், யூதாஸ் இஸ்காரியோத்தால் காட்டிக்கொடுக்கப்பட்டார் என்றும், இயேசு அவ்வேளையில், தம்மையே முழுவதுமாக அளித்தார் என்றும் கூறினார்

உணவு உண்பது குறித்து புனித இலொயோலா இஞ்ஞாசியார் எழுதிய விதிமுறைகள் பற்றி விளக்கிய இயேசு சபை அருள்பணி Jean-Paul Hernandez அவர்கள், நீ எப்படி உணவு உண்கிறாய் என்று சொல், நீ யார் என்று சொல்கிறேன் எனச் சொல்லியிருப்பதையும் குறிப்பிட்டுப் பேசினார், அருள்பணி மிக்கேலினி.

மேலும், இயேசு, தம் பாடுகளின் ஆரம்பத்தில் கூறிய கடைசி வார்த்தைகளை, இத்திங்கள் தியானச் சிந்தனைக்கு மையமாக வைத்து உரையாற்றினார், அருள்பணி மிக்கேலினி.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், திருப்பீட உயர் அதிகாரிகளும், வருகிற வெள்ளியன்று தங்களின் ஆண்டு தியானத்தை நிறைவு செய்வார்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.