2017-03-07 16:09:00

அமெரிக்க ஐக்கிய நாட்டை புலம்பெயர்வோர்க்கு அடைக்க வேண்டாம்


மார்ச்,07,2017. உலகெங்கும் இடம்பெறும் மனிதாபிமான நெருக்கடிகளால் மக்கள் புலம்பெயரும்வேளை, இத்தகைய மக்களை நாட்டுக்குள் அனுமதிப்பதை நிறுத்தி வைக்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப் அவர்களின் புதிய அரசாணை தவறானது என, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.

அரசுத்தலைவர் டிரம்ப் அவர்களின் புதிய அரசாணை குறித்து கருத்து தெரிவித்த, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் குடியேற்றதாரர் பணிக்குழுவின் தலைவரான, Austin ஆயர் ஜோ வாஸ்கெஸ் (Joe Vasquez) அவர்கள், புலம்பெயர்வோரை அனுமதிப்பது மற்றும், பயணத் தடை குறித்த, புதுப்பிக்கப்பட்ட அரசாணையினால் ஏற்படவிருக்கும் மனிதாபிமான கடும் விளைவுகள் குறித்து, மிகவும் கவலை கொள்வதாகத் தெரிவித்தார்.

பொதுமக்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை என்பதை வலியுறுத்தி வரும் அமெரிக்க ஆயர்கள், அந்த இலக்கை எட்டுவதற்கு, எடுக்கப்படும் அறிவார்ந்த மற்றும், அவசியமான நடவடிக்கைகளை வரவேற்பதாகவும் கூறினார், ஆயர் வாஸ்கெஸ். 

அரசுத்தலைவர் டிரம்ப் அவர்கள், இத்திங்களன்று வெளியிட்ட புதிய அரசாணையில், 2017ம் நிதியாண்டில், நாட்டில் அனுமதிக்கப்படும் புலம்பெயர்ந்தோரின் மொத்த எண்ணிக்கை ஐம்பதாயிரம் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் முன்னாள் அரசுத்தலைவர் ஒபாமா நிர்வாகத்தின்போது, 2016ம் நிதியாண்டில், 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிரியா நாட்டுப் புலம்பெயர்ந்தோர் உட்பட, 85 ஆயிரம் பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டது என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : CNA / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.