2017-03-06 15:52:00

வத்திக்கான் அதிகாரிகளுடன் ஆண்டு தியானத்தில் திருத்தந்தை


மார்ச்,06,2017. திருத்தந்தையும், திருப்பீடத் துறைகளைச் சார்ந்த உயர் அதிகாரிகள் அனைவரும், உரோம் நகருக்கு ஏறக்குறைய 16 மைல் தூரத்தில் அமைந்துள்ள அரிச்சா நகர், தெய்வீகப் போதகர் இல்லத்தில், மார்ச் 5, இஞ்ஞாயிறு மாலை முதல் தங்களின் ஆண்டு தியானத்தைத் தொடங்கியுள்ளனர்.

இத்தியானத்தையொட்டி, ஞாயிறு, உள்ளூர் நேரம், மாலை 4 மணிக்கு, திருப்பீட அதிகாரிகளுடன், தனியார் பேருந்தில் அரிச்சா நகருக்குப் பறப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மாலை 6 மணிக்கு தன் 5 நாள் தியானத்தைத் துவக்கினார்.

மார்ச் 10, வருகிற வெள்ளிக்கிழமை வரை நடைபெறவிருக்கும் இந்த ஐந்து நாள்கள் தியானத்தில், பிரான்சிஸ்கன் சபை அருள்பணியாளர் ஜூலியோ மிக்கேலினி அவர்கள், தியான உரைகளை வழங்குகிறார்.

தவக்காலத்தில், திருத்தந்தையும், திருப்பீடத் துறைகளைச் சார்ந்த உயர் அதிகாரிகளும் தியானம் செய்வது, ஏறக்குறைய எண்பது ஆண்டுகளுக்கு முன்னர், திருத்தந்தை 11ம் பயஸ் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட வழக்கம் என்பதும், வத்திக்கானிலேயே இத்தியானங்கள் நடைபெற்று வந்த பழக்கத்தை மாற்றி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் விருப்பத்தின்படி, 2014ம் ஆண்டு, தவக்காலத்திலிருந்து உரோம் நகருக்கு வெளியே, தியான இல்லத்தில் இது நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கன.

கடந்த ஆண்டுகளைப் போலவே, அரிச்சா நகரில், புனித பவுல் துறவு சபையினர் நடத்தும் தெய்வீகப் போதகர் இல்லத்தில், இந்த ஆண்டு தியானமும் இடம்பெறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.