2017-03-06 15:45:00

கைத்தொலைபேசியைப் போல் விவிலியத்தையும் வைத்திருங்கள்


மார்ச்,06,2017. கைத்தொலைபேசியைப்போல், எப்போதும் விவிலியப்பிரதியை தங்கள் கையில் வைத்துக்கொண்டு இயேசு வழங்கும் செய்தியை வாசித்தறியுமாறு அழைப்புவிடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தவக்காலத்தின் முதல் ஞாயிறான இம்மாதம் 5ம் தேதி, உரோம் நகரின் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த விசுவாசிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கைத்தொலைபேசியை அடிக்கடி திறந்து செய்தியை வாசிப்பதுபோல், இத்தவக்காலத்தில் கையடக்க விவிலியப் பிரதியை நம்முடன் எப்போதும் வைத்துக்கொண்டு வாசிக்கப் பழகுவோம் என்றார்.

விவிலியத்தை அடிக்கடி வாசித்து, நம் உள்மனதில் மதிப்பீடுகளை வளர்த்துக் கொள்ளும்போது, தீமைகளை எதிர்த்துப் போரிடவும், அயலவர் மீது அன்பு காட்டவும் அது உதவும் எனவும் கூறினார் திருத்தந்தை.

இயேசு, சாத்தானால் சோதனைக்கு உள்ளானது பற்றிக் கூறும் இஞ்ஞாயிறு திருப்பலி வாசகம் குறித்து தன் மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கீழ்ப்படிதல் மற்றும் தாழ்ச்சியின் பாதையிலிருந்து இயேசுவை திசை திருப்ப முயலும் சாத்தானின் முயற்சியை முறியடிப்பதுபோல் நாமும் முறியடிக்க, இறைவார்த்தைகளே நமக்கு உதவ முடியும் என்றார்.

இஞ்ஞாயிறு மாலை, தன் ஆண்டு தியானத்தை, வத்திக்கான் உயர் அதிகாரிகளுடன் துவக்கவிருப்பது குறித்து தன் மூவேளை செப உரையின் இறுதியில் தெரிவித்து, தங்களுக்காக செபிக்குமாறு அழைப்பையும் விடுத்தார், திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.