2017-03-04 15:15:00

திருஇசையின் மரபை புதுப்பிக்க திருத்தந்தை அழைப்பு


மார்ச்,04,2017. திருவழிபாடுகளில் இசைக்கப்படும் பாடல்களைப் புதுப்பிக்குமாறு, திருவழிபாட்டு இசைத்துறையிலுள்ள அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திரு இசையின் தரத்தைப் பொருத்தமட்டில், திரு இசையையும், திருவழிபாடுகளில் இசைக்கப்படும் பாடல்களையும் புதுப்பிப்பதற்கு, பாடல் ஆசிரியர்கள், இசை அமைப்பாளர்கள், பாடகர்கள், திருவழிபாடுகளை வழிநடத்துபவர்கள் உட்பட, இத்துறையிலுள்ள எல்லாரும், தங்களின் சிறப்பான பங்கை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ். 

திருவழிபாடு பற்றிய இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்க கொள்கை விளக்கம் வெளியிடப்பட்டு ஐம்பது ஆண்டுகள் ஆகியுள்ளதை முன்னிட்டு, உரோம் அகுஸ்தீனியானம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பன்னாட்டு கருத்தரங்கில் கலந்துகொண்ட நானூறுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை, இச்சனிக்கிழமையன்று, திருப்பீடத்தின் கிளமெந்தினா அறையில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு அழைப்பு விடுத்தார்.

திருவழிபாட்டில், நவீனத்தையும், அந்தந்தப் பகுதி மொழிகளையும் புகுத்தும்போது, இசை மொழிகளிலும், அதன் அமைப்புகளிலும், பல்வேறு பிரச்சனைகள் எழும்புகின்றன என்றுரைத்த திருத்தந்தை, இதை எளிதாக்குவதற்கு, தகுந்த இசைக் கல்வி ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

அருள்பணியாளர்களுக்குப் பயிற்சி பெற்றுவரும் குருத்துவ மாணவர்களுக்கு, இக்காலத்தின் இசைப் போக்கு, பல்வேறு கலாச்சாரங்கள், கிறிஸ்தவ ஒன்றிப்பு எண்ணம் போன்றவற்றில் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் கூறினார்  திருத்தந்தை.

“இசையும், திருஅவையும் : Musicam sacram என்ற இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்க கொள்கைத் திரட்டு வெளியிடப்பட்ட ஐம்பது ஆண்டுகளுக்குப் பின், வழிபாடும், கலாச்சாரமும்” என்ற தலைப்பில், மார்ச் 2,3,4 ஆகிய தேதிகளில் நடந்த இக்கருத்தரங்கை, திருப்பீட கத்தோலிக்க கல்வி பேராயம், திருப்பீட கலாச்சார அவை, திருப்பீட திருஇசை நிறுவனம், புனித ஆன்செல்ம் பாப்பிறை திருவழிபாடு நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தின.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.