2017-03-04 14:33:00

தவக்காலம் முதல் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


பல்வேறு பிரச்சனைகளால் மனம் தளர்ந்துபோயிருந்த ஓர் இல்லத்தலைவி,  பங்குத்தந்தையைச் சந்திக்கச் சென்றார். "சாமி, எல்லாத்தையும் விட்டுட்டு, எங்கேயாவது, கண்காணாத இடத்துக்கு போயிடணும் போல இருக்கு" என்று அவர் ஆரம்பித்தார். வீட்டு வேலை, அலுவலக வேலை, பங்குக்கோவில் வேலை என்று அனைத்தையும் விட்டுவிட நினைத்தார் அவர். பல்வேறு ஆலோசனைகளுக்குப்பின், இறுதியாக, "எல்லாவற்றையும் விட்டுவிடுவதற்குப் பதில், ஒரு வாரத்திற்கு வேலை நிறுத்தம் (strike) செய்யுங்கள்" என்று, பங்குத்தந்தை சொன்னது, இல்லத்தலைவிக்கு சரியென்று பட்டது.

வீட்டுக்குச் சென்றவர், தனக்குத் தாங்க முடியாத வயிற்றுவலி என்று சொல்லிவிட்டு, படுத்துக்கொண்டார். அலுவலகத்திலிருந்தும் விடுமுறை எடுத்துக்கொண்டார். அவரது நிலையைக் கண்ட கணவனும், பிள்ளைகளும், அவர் மீது தனி கவனம் செலுத்த ஆரம்பித்தனர். வீட்டு வேலைகளை, அனைவரும், பகிர்ந்து செய்தனர். இரண்டு நாட்கள் சென்றன. படுத்திருந்த வீட்டுத்தலைவிக்கு, 'போர்' அடித்தது. தொலைக்காட்சியில் மீண்டும், மீண்டும் ஒரே மாதிரியான நிகழ்ச்சிகளைப் பார்த்து, அலுத்துப் போனது. உதவி செய்வதாக எண்ணி, கணவனும், பிள்ளைகளும் வேலைகள் செய்துவிட்டுச் சென்றபின், சமையலறையைப் பார்த்த வீட்டுத்தலைவி, பயந்துபோனார். அவர்கள் செய்த வேலைகளை மீண்டும் சரிசெய்ய, இன்னும் பல நாட்கள் ஆகுமே என்று பயந்தார்.

ஒரு வார வேலை நிறுத்தம் என்ற தீர்மானத்தில் இருந்தவர், இரண்டே நாட்களில், மீண்டும், தன் பணிகளை ஆரம்பித்தார். மூன்றாம் நாள், அவரைக் காண பங்குத்தந்தை சென்றபோது, அவர் வீட்டு வேலைகளை மும்முரமாய் செய்து கொண்டிருந்தார். ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்த பங்குத்தந்தையிடம், "சாமி, எந்த ஒரு சோதனையும் வரும்போது அழகாகத்தான் இருக்கு. சோதனைக்கு இடம் கொடுத்த பிறகுதான், அதனுடைய உண்மை உருவம் தெரியுது" என்று, தான் பெற்ற ஞானோதயத்தை, வீட்டுத்தலைவி பகிர்ந்துகொண்டார்.

எந்த ஒரு சோதனைக்கும், முகம் அழகாக இருக்கும், முதுகு, அழுக்காக, அருவருப்பாக இருக்கும். நம் எல்லாருக்கும் இந்த அனுபவம் இருந்திருக்கும். சோதனைகளைப் பற்றி நாம் இன்னும் கூடுதலாக தெளிவுபெற, இந்த ஞாயிறு, நமக்கு ஒரு வாய்ப்பைத் தருகிறது.

ஒவ்வோர் ஆண்டும், தவக்காலத்தின் முதல் ஞாயிறு, நமக்கு வழங்கப்படும் மையக்கருத்து, 'சோதனை'. சோதனை பற்றி மறையுரையில் என்ன சொல்லலாம் என்று மற்றொரு அருள்பணியாளரிடம் நான் கேட்டபோது, அவர் உடனே, "சோதனை மேல் சோதனை, போதுமடா சாமி" என்ற திரைப்படப் பாடலை, பாட ஆரம்பித்தார். தீர்க்கமுடியாத பிரச்சனைகளில் சிக்கிய ஒரு வீட்டுத்தலைவன் பாடுவதாக அமைந்துள்ள இப்பாடலில், சோதனைகளை அனுப்புவது கடவுள் என்ற கருத்து மறைந்துள்ளது.

சோதனைகள் கடவுளிடமிருந்து வருவதாக, நம்மில் பலர் எண்ணுகிறோம்; பேசுகிறோம். பிரச்சனைகள் நம்மைச் சூழும்போது, "கடவுளே, ஏன் இப்படிச் சோதிக்கிறாய்?" என்று, கடவுளிடம் முறையிடுகிறோம். அல்லது, "கடவுள் ஏன்தான் இப்படி என்னைச் சோதிக்கிறாரோ, தெரியவில்லை" என்று மற்றவர்களிடம் புலம்புகிறோம்.

சோதனைகள் கடவுளிடமிருந்து வருகின்றனவா? என்ற கேள்விக்கு, இன்றைய நற்செய்தி பதில் தருகின்றது. "இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காகப் பாலை நிலத்திற்குத் தூய ஆவியால் அழைத்துச் செல்லப்பட்டார்" (மத். 4:1) என்ற அறிமுக வரிகளை ஆய்வு செய்யும்போது, இரு எண்ணங்கள் மனதில் எழுகின்றன. சோதனைகளைத் தருவது, அலகை. அச்சோதனைகளைச் சந்திப்பதற்கு, நம்மை அழைத்துச் செல்வது, தூய ஆவியார். சோதனைகளைச் சந்திக்க, கடவுள் நம்மை 'இழுத்துச் செல்வதில்லை', 'அழைத்துச் செல்கிறார்' என்பது, நாம் கவனிக்க வேண்டிய கருத்து.

இத்தகைய அழைப்பை, இறைவன், நம் முதல் பெற்றோருக்கும் தந்தார். கண்ணுக்கு அழகானதும் உண்பதற்குச் சுவையானதுமான எல்லா வகை மரங்களையும் (தொ.நூ. 2:9) கொண்ட ஒரு தோட்டத்தை, ஏதேனில் உருவாக்கிய இறைவன், 'தோட்டத்தின் நடுவில் உள்ள மரத்தின் கனியை மட்டும் நீங்கள் உண்ணக்கூடாது; அதைத் தொடவும் கூடாது' (தொ.நூ. 3:3) என்று, முதல் பெற்றோரிடம் கட்டளையிட்டார். இதை நாம் வாசிக்கும்போது, மனதில், ஒரு நெருடல் எழுகிறது.

ஒரு மரத்தை உருவாக்கி, பின்னர், அதைத் தொடக்கூடாது என்று சொல்வதற்குப் பதில், அந்த மரத்தை அவர் படைக்காமலேயே இருந்திருக்கலாமே! அதேபோல், பாம்பை, சூழ்ச்சிமிக்கதாய் படைக்காமல் இருந்திருக்கலாமே! தான் படைத்த பெண்ணை, பாம்புடன் பேசவிடாமல் தடுத்திருக்கலாமே!

கடவுள் இப்படிச் செய்திருக்கலாமே, அப்படிச் செய்திருக்கலாமே, என்ற பாணியில், அவ்வப்போது சிந்திக்கும் நாம், சோதனைகள், பிரச்சனைகள் என்று எதுவுமே இல்லாத ஓர் உலகை இறைவன் படைத்திருக்கலாமே! தீமை என்றால் என்னவென்றே அறியாதவண்ணம் மனிதர்களை உருவாக்கியிருக்கலாமே! என்று, கடவுளுக்கு, அடுக்கடுக்காய் ஆலோசனைகள் தர, முன்வருகிறோம்.

பிரச்சனைகள் ஏதுமற்ற உலகில், தீமையே அறியாத, குறைகளே இல்லாத, படைப்பாக நாம் இருந்திருந்தால், இயந்திரகதியில் இயங்கும் 'ரோபோக்களை'ப்போல் (Robot) உலகில் உலவி வந்திருப்போம். நன்மையையும், தீமையையும், நம் முன் வைத்து, அவற்றில் நாம் விரும்புவதைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தையும், சக்தியையும், இறைவன் நமக்கு வழங்குகிறார். இதுதான் அவர் தரும் அழைப்பு.

சோதனை என்பது, ஆறறிவுள்ள மனிதர் அனைவரும் சந்திக்கும் ஓர் அனுபவம். இதற்கு, இறைமகன் இயேசு உட்பட, யாரும் விதிவிலக்கு அல்ல. தன் பணி வாழ்வை ஆரம்பிப்பதற்கு முன், தந்தையாம் இறைவனை, தனியே சந்திக்கச் சென்றிருந்த இயேசுவை, அலகையும் சந்தித்தது. அலகை, இயேசுவுக்கு தந்த சோதனைகளும், அவற்றை, இயேசு சந்தித்த விதமும், நமக்குப் பாடங்களைச் சொல்லித்தருகின்றன.

சோதனைகள் அழகானவை என்பது முதல் பாடம். இயேசுவின் வாழ்வைச் சித்திரிக்கும் நாடகங்களைப் பார்த்திருக்கிறோம். அந்த நாடகங்களில் காட்டப்படும் சோதனைக் காட்சிகளில், சாத்தான், கருப்பு உடை உடுத்தி, முகமெல்லாம் கரி பூசி, தலையில் இரு கொம்புகளோடும், நீண்ட இரு பற்களோடும் பயங்கரமாய் சிரித்துக்கொண்டு வரும். இவ்வளவு பயங்கரமாய் சாத்தான் வந்தால், அதை விட்டு ஓடிவிடுவோம், அல்லது, அதை விரட்டியடிப்போம். ஆனால், வாழ்வில் நாம் சந்தித்துள்ள, இனியும் சந்திக்கவிருக்கும் சாத்தான்களும், அவை கொண்டுவரும் சோதனைகளும், பயத்தில் நம்மை விரட்டுவதற்குப் பதில், கவர்ந்திழுக்கின்றன என்பதுதானே நம் அனுபவம். அலகை தரும் சோதனைகள், அவ்வளவு அழகானவை!

இன்று நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ள மூன்று சோதனைகளையும் மேலோட்டமாகப் பார்த்தால், அவற்றை ‘நல்ல’ சோதனைகள் என்றே சொல்லத்தோன்றுகிறது. கொலை, கொள்ளை, ஏமாற்றுதல் என்று, தவறான செயல்களைச் செய்யச்சொல்லி, அலகை, இயேசுவைத் தூண்டவில்லை.

நாற்பதுநாள் கடுந்தவத்தை முடித்த இயேசு சந்தித்த முதல் சோதனை என்ன? பசியாய் இருந்த இயேசுவிடம், கல்லை, அப்பமாய் மாற்றச் சொன்னது அலகை. இயேசுவிடம் இருந்த சக்தியைப் பயன்படுத்தி, அவரது தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளத் தூண்டியது சாத்தான். தேவைகள் அதிகமாகும்போது, அந்தத் தேவைகளை உடனுக்குடன் தீர்த்துவிடத் துடிக்கும்போது, குறுக்கு வழிகளைத் தேடும் சோதனைகள் அதிகமாகின்றன.

நாம் இன்றைய உலகில் சந்திக்கும் பெரும் சோதனை, பார்க்கும் அனைத்தையும், பசிதீர்க்கும் அப்பமாக மாற்றும் சோதனை. தேவைக்கும் அதிகமாக பல்வேறு பசிகளைத் தூண்டும் 'நுகர்வுக் கலாச்சாரம்', காணும் அனைத்தையும், நுகர்வது மட்டும் போதாதென்று, விழுங்கவும் சொல்லித்தருகிறது. இந்த நச்சுக் கலாச்சாரத்திலிருந்து நம்மை மீட்கும் ஒரே வழி, இறைவார்த்தையை நம்பி வாழ்வது! சுயநலப் பசியைவிட, இன்னும் உன்னதமான உண்மைகள், உணர்வுகள், இவ்வுலகில் உள்ளன என்ற பாடத்தை, முதல் சோதனையை, தான் எதிர்கொண்ட முறை வழியே, நமக்குச் சொல்லித்தருகிறார் இயேசு.

இயேசு சந்தித்த இரண்டாவது சோதனை என்ன? உலகை வெல்வதற்கு, எந்தத் தொந்தரவும், துன்பமும் இல்லாத குறுக்கு வழியொன்றை, அலகை, இயேசுவுக்குக் காட்டுகிறது. எருசலேம் ஆலயத்தின் மேலிருந்து இயேசு குதித்தால், உடனே வானம் திறந்து, வானதூதர்கள், ஆயிரக்கணக்கில் இறங்கி வந்து, இயேசுவின் பாதம், தரையைத் தொடாமல், அவரைத் தாங்கிய வண்ணம் தரைக்குக் கொண்டு வருவார்கள். உலக முடிவில் அவர் மாட்சியுடன் வரும் காட்சிக்கு ஓர் ஒத்திகைபோல இது அமையும். எருசலேம் மக்கள், ஏன்... உலக மக்கள் அனைவரும், இயேசுவின் சீடர்களாகிவிடுவர்.

30 ஆண்டுகள் - மறைந்த வாழ்வு, 3 ஆண்டுகள் - கடினமான பணி, இறுதி 3 நாட்கள் - கடும் வேதனை, இறுதி 3 மணி நேரம் - சிலுவையின் கொடூரச் சித்ரவதை... இவை எதுவும் இயேசுவுக்குத் தேவையில்லை. மூன்று நிமிடங்கள் போதும். எருசலேம் ஆலய சாகசம் ஒன்று போதும்... உலகம், இயேசுவின் காலடியில் கிடக்கும்! சுருக்கமான வழி... எளிதான முயற்சி... எக்கச்சக்கமான வெற்றி.

இவ்விரு சோதனைகளிலும் சாத்தான் சோதனையை ஆரம்பித்த விதமே கவர்ச்சியாக அமைந்தது. "நீர் இறைமகன் என்றால், இந்தக் கற்கள் அப்பமாகும்படி கட்டளையிடும்"; "நீர் இறைமகன் என்றால், கீழே குதியும்" என்று, சாத்தான் சவால் விடுகின்றது.

"நீர் இறை மகன் என்றால்..." என்று சாத்தான் சொல்வதன் வழியாக, இறைமகன் எப்படிப்பட்டவராய் இருக்கவேண்டும் என்று, சாத்தான் இலக்கணம் எழுதுகிறது. இந்த இலக்கணத்தின்படி, இறைமகன், புதுமைகள் நிகழ்த்தவேண்டும், அதுவும் தன்னுடைய சுயத்தேவைகளை நிறைவு செய்ய, தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள, புதுமை செய்யவேண்டும்.

இறைமகனுக்கு சாத்தான் இலக்கணம் வகுத்ததுபோல், நாமும் அவ்வப்போது இறைவனுக்கு இலக்கணம் வகுத்துள்ளோம் என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும். கடவுள் அந்த மரத்தை படைக்காமலேயே இருந்திருக்கலாம் என்றும், பாம்பை, சூழ்ச்சிமிக்கதாய் படைக்காமல் இருந்திருக்கலாம் என்றும், நாம் கடவுளுக்குத் தரும் ஆலோசனைகள், இறைவனுக்கு நாம் வகுக்கும் இலக்கணம்!

கல்லை அப்பமாக்கி, பசியைத் தீர்த்துக்கொள்ள தன் சக்தியைப் பயன்படுத்த மறுத்த இயேசு, பல்லாயிரம் பேரின் பசியைத் தீர்க்க தன் சக்தியைப் பயன்படுத்தினார் என்பது நமக்குத் தெரியும். நமக்கு இறைவன் கொடுத்துள்ள சக்திகளை, திறமைகளை எதற்காகப் பயன்படுத்துகிறோம்? சுயத்தேவைகளை நிறைவு செய்யவா? பிறர் தேவைகளை நிறைவு செய்யவா? சிந்திக்கலாம்; இயேசுவிடம் பாடம் கற்றுக்கொள்ளலாம்.

மூன்றாவது சோதனையில், உலகமனைத்தையும் இயேசுவிடம் ஒப்படைக்க விரும்புவதாக அலகை சொல்கிறது. உலகை, தன் வசமாக்க, மனுவுருவெடுத்த இயேசு, இப்படி ஒரு சந்தர்ப்பம் வரும்போது, ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே! அவ்விதம், இயேசு, உலகை தன் மயமாக்க வேண்டுமானால், அவர் சாத்தானோடு சமரசம் செய்யவேண்டும்... இல்லை, இல்லை, சாத்தானிடம் சரணடைய வேண்டும். இயேசு அதை திட்டவட்டமாக மறுத்தார்; சாத்தானை விரட்டியடித்தார். சாத்தான் முன் சரணடைய மறுத்த இயேசு, சிலுவையில் தொங்கியபோது,  "தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்" (லூக்கா 23: 46 ) என்று இறைவனிடம் சரணடைந்தார்; உலகை, தன் வசமாக்கினார்.

தவறான வழிகள், தவறான சக்திகளுடன் எத்தனை முறை சமரசம் செய்திருக்கிறோம்? எத்தனை முறை, இவற்றிற்கு முன் சரணடைந்திருக்கிறோம்? நல்லது ஒன்று நடக்க வேண்டுமென்று, தீமைகளைச் சகித்துக்கொள்வதும், தீமைகள் நடக்கும்போது கண்களை மூடிக்கொள்வதும், இவ்விதம் நடப்பது, ஊரோடு ஒத்து வாழ்வதற்காக என்று சமாதானம் சொல்லிக்கொள்வதும், நாம் வாழ்வில் அடிக்கடி, பார்த்து, பழகி வந்துள்ள எதார்த்தங்கள். இப்படி சமரசம் செய்வதே, நம் வாழ்க்கையாக மாறிவிட்டதா என்று சிந்திப்பது நல்லது.

கண்மூடித்தனமாக நுகர்வுக் கலாச்சாரத்தைப் பின்பற்றி, சுயத்தேவைகளைப் பெருக்கிக் கொள்ளுதல், சுயநலப்பசியைத் தீர்த்துக்கொள்ள சுருக்கு வழிகளைத் தேடுதல், சுய விளம்பரத்திற்காக எதையும் செய்தல், உலகின் தீய சக்திகளோடு சமரசம் செய்தல் என்று, நம்மை கவர்ந்திழுக்கும் அழகான சோதனைகளுக்கு நம் பதில் என்ன? இயேசுவிடமிருந்து பாடங்களை நாம் கற்றுக்கொள்ள முடியுமா? கற்றுக்கொண்டதை செயலாக்க முடியுமா? இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல, தவக்காலம், நல்லதொரு நேரம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.