2017-03-03 15:44:00

திருப்பீடத்தில் ஐரோப்பிய ஒன்றிய அவை தலைவர்கள்


மார்ச்,03,2017. உரோம் ஒப்பந்தம் இடம்பெற்றதன் அறுபதாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்கு உரோம் நகருக்கு வரவுள்ள ஐரோப்பிய ஒன்றிய அவை நாடுகளின் தலைவர்களை, மார்ச் 24ம் தேதி, மாலை 6 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பீடத்தில் சந்திக்கவுள்ளார் என்று, திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் கிரெக் புர்கே (Greg Burke) அவர்கள் அறிவித்தார்.

1957ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி, உரோம் நகரில், ஆறு நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டு உருவாக்கிய உரோம் ஒப்பந்தத்தின்படி, EU என்ற ஐரோப்பிய ஒன்றியம் பிறந்தது.  தற்போது, இந்த ஒன்றியத்தில் 28 உறுப்பு நாடுகள் உள்ளன.

மேலும், இந்த அறுபதாம் ஆண்டு நிகழ்வு பற்றிப் பேசிய மால்ட்டா பிரதமர் Joseph Muscat அவர்கள், ஐரோப்பாவின் வருங்காலத்திற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உள்ளார்ந்த கருத்துக்கள், மிக முக்கியம் என்று தெரிவித்தார்.

EU ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவராக தற்போது பணியாற்றும் மால்ட்டா பிரதமர் Muscat அவர்கள், உரோமன் கத்தோலிக்கத் தலைவராகிய திருத்தந்தை அவர்கள், அரசியல்வாதிகள் சிந்திக்கத் தவறும் கருத்துக்களை வழங்கக்கூடும் எனவும், தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.