2017-03-02 15:21:00

பங்கு அருள்பணியாளர்களுக்கு திருத்தந்தையின் தவக்கால தியானம்


மார்ச்,02,2017. நம்பிக்கையை மிகுதியாக்கும் என்ற வேண்டுதல், மனமாற்றத்தின் துவக்கமாக, நம்மிடமிருந்து எழவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் மறைமாவட்டத்தில் பணியாற்றும் பங்கு அருள்பணியாளர்களிடம் கூறினார்.

மார்ச் 2, இவ்வியாழன் காலை, புனித ஜான் இலாத்தரன் பசிலிக்கா பேராலயத்தில், உரோம் மறைமாவட்ட பங்கு அருள்பணியாளர்களைச் சந்தித்த திருத்தந்தை, அவர்களுக்கு வழங்கிய தவக்காலத் தியான உரையில் இவ்வாறு கூறினார்.

உடன்பிறந்தோர் குற்றம் புரிந்தபின் அவர்கள் மன்னிப்பு வேண்டி வந்தால், அவர்களை ஏழுமுறை, எழுபது முறை மன்னிக்கவேண்டும் என்று இயேசு கூறிய சொற்களைத் தொடர்ந்து, அவருடைய சீடர்கள், "எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்" (லூக்கா 17:5) என்று வேண்டிக்கொண்டதை தன் தியான உரையின் துவக்கத்தில் குறிப்பிட்டத் திருத்தந்தை, நினைவாற்றல், நம்பிக்கை, தேர்ந்து தெளிதல் என்ற மூன்று கருத்துக்களின் அடிப்படையில் தன் உரையை வழங்கினார்.

நமது நம்பிக்கை வளர்வதற்கு, நினைவாற்றல் மிக உதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டத் திருத்தந்தை, நம்பிக்கை கொண்டவர்கள், இறைவன் வழங்கக்கூடிய ஆச்சரியமான விடயங்களையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பெற்றிருப்பர் என்று எடுத்துரைத்தார்.

நம்பிக்கையுடன் நடந்து செல்லும் பாதையில் ஒவ்வொரு தருணத்திலும் ஏற்படும் திருப்பங்களைச் சீர்தூக்கிப் பார்த்து, தேர்ந்து தெளியும் உள்ளத்தை அருள்பணியாளர்கள் பெற்றிருக்க வேண்டும் என்று, தன் தியான உரையில் வலியுறுத்திக் கூறினார், திருத்தந்தை.

நினைவாற்றல் குறித்து விளக்கமாகப் பேசியத் திருத்தந்தை, ‘இதை என் நினைவாகச் செய்யுங்கள்’ என்று, சொன்ன இயேசுவின் பலியை, ஒவ்வொருநாளும் கொண்டாடும் பாக்கியம் பெற்றோர், அருள்பணியாளர்கள் என்பதைச் சுட்டிக்காட்டியபின், "திருப்பலி என் வாழ்வு, மற்றும், என் வாழ்வு தொடர்ந்து நிகழும் ஒரு திருப்பலி" என்று புனித அல்பெர்த்தோ ஹுர்த்தாதோ (Alberto Hurtado) கூறியதை நினைவுகூர்ந்தார்.

"சீமோனே, சீமோனே, ... நான் உனது நம்பிக்கை தளராதிருக்க உனக்காக மன்றாடினேன்" (லூக்கா 22:31-32) என்று இயேசு கூறிய சொற்களை எடுத்துரைத்தத் திருத்தந்தை, தன் வாழ்நாள் முழுவதும் சோதனைகளோடு போராடிய பேதுரு, நமக்கொரு சிறந்த எடுத்துக்காட்டு என்று சுட்டிக்காட்டினார்.

அருள்பணியாளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் உருவாகும் சோதனைகளையும், பாவங்களையும் நேருக்கு நேர் சந்தித்து, அவ்வேளைகளில், இயேசு நமக்காக மன்றாடுகிறார் என்ற உறுதியுடன், பாவங்களை வெல்வதோடு, மற்றவர்களையும் வாழ்வில் பற்றுறுதியுடன் வாழ்வதற்கு தூண்டவேண்டும் என்று, திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

இவ்வியாழன் காலை 11 மணியளவில் புனித ஜான் இலாத்தரன் பசிலிக்காவை அடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கு, ஏறத்தாழ 12 அருள்பணியாளர்களுக்கு ஒப்புரவு அருள் சாதனம் வழங்கியபின், 11.50 மணிக்கு தன் தியான உரையை வழங்கினார். திருத்தந்தையின் தியான உரை, வத்திக்கான் தொலைக்காட்சி வழியே நேரடியாக ஒளிபரப்பானது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.