2017-03-01 15:37:00

பிரேசில் தலத்திருஅவைக்கு திருத்தந்தையின் செய்தி


மார்ச்,01,2017. அனைத்தையும் உருவாக்கிய இறைவன், பிரேசில் நாட்டிற்கு இயற்கை வளங்களை தாராளமாக வழங்கியிருந்தாலும், அவர் உருவாக்கிய படைப்பை அழிக்கும் அடையாளங்களும் அந்நாட்டில் உள்ளன என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிரேசில் ஆயர் அவைக்கு அனுப்பிய ஒரு செய்தியில் கூறியுள்ளார்.

ஒவ்வோர் ஆண்டும், தவக்காலத்தையொட்டி, பிரேசில் ஆயர் பேரவை, உடன்பிறந்தோர் கருத்துப் பரப்பு முயற்சியொன்றை மேற்கொண்டு வருகிறது. மார்ச் 1, இப்புதனன்று துவங்கும் தவக்காலத்தையொட்டி, 54வது முறையாக சிறப்பிக்கப்படும் இந்த கருத்துப்பரப்பு முயற்சிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட 'இறைவா உமக்கேப் புகழ்' என்ற திருமடலை அடிப்படையாகக் கொண்டு, "உடன்பிறந்தோர் உணர்வு: பிரேசிலின் இயற்கை கட்டமைப்பும், வாழ்வுக்குப் பாதுகாப்பும்" என்ற தலைப்பில், பிரேசில் ஆயர்கள் மேற்கொண்டுள்ள இந்த முயற்சியைப் பாராட்டி, திருத்தந்தை செய்தி அனுப்பியுள்ளார்.

பிரேசில் நாட்டின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில், தலத்திருஅவை, பல ஆண்டுகளாக முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளது என்பதை, தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, "மனிதம் மிக்க உலகை நோக்கி" என்ற மையக்கருத்தை, 1979ம் ஆண்டு, பிரேசில் ஆயர் பேரவை தேர்ந்தெடுத்ததை சிறப்பாகச் சுட்டிக்காட்டினார்.

ஒவ்வோர் ஆண்டும், தவக்காலத்தை மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் இந்த முயற்சியின் வழியே, பிரேசில் தலத்திருஅவையிலும், நாட்டிலும், மனிதர்களுக்கிடையிலும், மனிதருக்கும் இயற்கைக்கும் இடையிலும், நீதியான, சம நிலை உருவாக தான் செபிப்பதாக திருத்தந்தை தன் செய்தியில் கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.