2017-03-01 15:13:00

தவக்காலச் சிந்தனை : முரண்பாடு


தவக்காலம் இறையுறவினை புதுப்பிக்க அழைப்புவிடுக்கின்றது. இவ்வுலகில் நாம் கொண்டுள்ள அனைத்து உறவுகளும் மேலோட்டமாகவே இருந்துவிடுகின்றன. பிறரை நமது சுயநலத்தின் தேவைகளுக்காகவும், ஆசைகளுக்காகவும் பயன்படுத்துகின்ற ஒரு வியாபார நுகர்வு கலாச்சாரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நமது சுயநல குறிக்கோள்களுக்காக பிறரிடம் அன்பு காட்டுவதும், நமது பயன்பாட்டிற்காக பிறரிடம் அன்பாய் பழகுவதும், இன்றைய எதார்த்தமாக மாறிவிட்டது. இதே மதிப்பீட்டைத்தான் இறையுறவிலும் நாம் செயல்படுத்துகின்றோம்.

இறைவா நீர் மட்டும் எனக்கு போதும், என்று கூறிவிட்டு, இறைவனுக்காக செலவழிக்கும் நேரத்தைவிட, உலக நாட்டங்களுக்காக அதிக நேரத்தை செலவழிக்கின்றோம்.

இறைவா, உமது பணி செய்வதே போதும், என்று கூறிவிட்டு, பதவிகளையும், அதிகாரங்களையும், தேடி, தேடிச் சென்று, பிறரை அடிமைப்படுத்த நினைக்கின்றோம்.

இறைவா, உமது நீதியும் இரக்கமும் போதும், என்று கூறிவிட்டு, பிறரை அநியாயமாக தீர்ப்பிடுகின்றோம்.

ஆம், இத்தகைய முரண்பாட்டினால், இன்றைய நற்செய்தியில் கூறுவதுபோல, தன்னை இழக்கின்றேன் என்று கூறிவிட்டு உலகத்தையே தமதாக்கிக்கொள்ள துடிக்கின்றோம். இத்தகைய முரண்பாட்டினை தவிர்த்து, உலக நாட்டங்களுக்காக செலவிடும் நேரங்களை குறைத்து, இறைவனுக்காக செலவிடும் நேரங்களை அதிகரிக்க முயல்வோம். அப்பொழுது, நாம் இழப்பதனைத்தையும் பெற்றுக்கொள்வோம் என்பதில் எந்த ஓர் ஐயமும் இல்லை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.