2017-02-28 14:48:00

விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் யோபு – பகுதி 9


விமான நிலையம் ஒன்றில், நீண்ட வரிசைகளில், மக்கள் காத்திருந்தனர். அவ்வேளையில் அங்கு ஒருவர் வந்தார். தன்னைத்தானே ஒரு முக்கியப்புள்ளி என்று கருதிய அவர், வரிசையில் நிற்காமல், முன்னே சென்றார். பயணச் சீட்டுக்களை வழங்கிக்கொண்டிருந்த பணியாளர், அவரை, வரிசையில் வரும்படி சொன்னார். உடனே அவர் குரலை உயர்த்தி, "நான் யாரென்று உனக்குத் தெரியுமா?" என்று கேட்டார். பணியாளர், அவர்மீது கவனம் செலுத்தாமல், அடுத்தவரை வரச்சொன்னார். அந்த முக்கியப்புள்ளி, "நான் யாரென்று உனக்குத் தெரியுமா?" என்று மீண்டும் கத்தினார். உடனே அந்தப் பணியாளர், தனக்கு முன்னிருந்த 'மைக்'கில், "பயணிகளின் கவனத்திற்கு: இங்கு ஒருவர் வந்திருக்கிறார். அவருக்கு, தான் யார் என்பது தெரியவில்லை. தயவுசெய்து யாராவது அவருக்கு உதவி செய்யுங்கள்" என்று அறிவித்துவிட்டு, மீண்டும் தன் பணியில் ஈடுபட்டார்.

'நான் யார்' என்பதை அறிந்துகொள்வது, வாழ்வில் நாம் ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ளக் கூடிய, கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு முக்கியப் பாடம். இந்தப் பாடத்தை முதலில் நாம் கற்றுக்கொள்ளாமல், நாம் யார் என்பதை, மற்றவர்கள் அறிந்திருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது, சங்கடங்களை உருவாக்கும். தன்னைப் பற்றிய சரியான, தெளிவான புரிதல் இருந்தால், அதைவிட உயர்ந்த அறிவு இவ்வுலகில் இல்லை என்பதை, அறிஞர்கள் பலரும் கூறியுள்ளனர்.

"தன்னை அறிந்திடில் தனக்கொரு கேடில்லை; தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்" என்பது திருமூலர் சொல்லித்தந்த பாடம். இதையே, சாக்ரடீஸ் போன்ற உயர்ந்த மேதைகளும் சொல்லித் தந்துள்ளனர். "உன்னையே நீ அறிவாய்" என்பது, பிறக்கும் ஒவ்வொரு மனிதப் பிறவியும் அடையக்கூடிய மிக உன்னத அறிவு, என்று, பாரம்பரிய மதங்களும், கலாச்சாரங்களும் சொல்லித்தந்துள்ளன.

மார்ச் 1, திருநீற்றுப் புதனன்று, தவக்காலத்தைத் துவங்குகிறோம். நாற்பது நாள்கள் நாம் மேற்கொள்ளும் இம்முயற்சி வழியே, நம்மை நாமே தேடிக் கண்டுபிடிக்க, நம்மை நாமே வெற்றிகொள்ள, நமக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அருள்நிறை இக்காலத்தில் நாம் மேற்கொள்ளும் செபம், தவம், அறச்செயல், நோன்பு ஆகிய முயற்சிகள், நம்மை நாமே அறிந்துகொள்வதற்கும், நம்மை நாமே வெல்வதற்கும் பயன்படுத்தப்படவேண்டும். இது சரியான தவமுயற்சி. இதற்கு மாறாக, அடுத்தவரின் கவனத்தை ஈர்க்கும்வண்ணம் மேற்கொள்ளப்படும் தவமுயற்சிகள், வெறும் விளம்பரங்கள் என்றும், அதனால், எவ்வித பயனும் இல்லை என்றும், திருநீற்று புதனன்று வழங்கப்பட்டுள்ள நற்செய்தியில், இயேசு எச்சரிக்கிறார்.

மத்தேயு 6: 1,16-18

மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். மேலும் நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளிவேடக்காரரைப் போல முகவாட்டமாய் இருக்க வேண்டாம். தாங்கள் நோன்பு இருப்பதை மக்கள் பார்க்கவேண்டுமென்றே அவர்கள் தங்கள் முகங்களை விகாரப்படுத்திக் கொள்கிறார்கள்... நீங்கள் நோன்பு இருக்கும்போது உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்து, முகத்தைக் கழுவுங்கள். அப்பொழுது நீங்கள் நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாது.

தன்னறிவு பெறவும், தன்னை வென்று, புனித நிலைக்கு உயரவும், தரப்பட்டுள்ள இந்த தவக்காலத்தில், நாம், யோபு நூலில் தேடல்களைத் தொடர்வது, பொருத்தமாகத் தெரிகிறது. கடந்த 8 வாரங்களாக நாம் மேற்கொண்ட தேடலில், நீதிமானாகிய யோபு, தன் பணியாளர்கள், உடமைகள், புதல்வர், புதல்வியர் அனைவரையும் இழந்ததோடு அல்லாமல், தன் உடல் நலனையும் இழந்து, துன்புற்றதை புரிந்துகொண்டோம். இந்த இழப்புக்களைத் தொடர்ந்து, யோபு, ஒரு தேடல் பயணத்தைக் தொடங்குகிறார்.

தன்னறிவு பெறுவதற்கு யோபு மேற்கொண்ட இத்தேடல் பயணம், யோபு நூல், 3ம் பிரிவு முதல், 42ம் பிரிவு முடிய, 40 பிரிவுகளில், இடம்பெறுகின்றது. யோபு, தனக்குத்தானே சொன்னவை, யோபுக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல், இறுதியில், யோபுக்கும், இறைவனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல் என்று... 40 பிரிவுகள் வழியே, யோபின் தேடல் சித்திரிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, யோபு தன் வாழ்வில் அனைத்தையும் இழந்தபின், அவர், இந்தத் தேடல் பயணத்தைக் துவக்குகிறார் என்று, இந்நூல் சுட்டிக்காட்டுவது, நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது.

சொத்து, சுகம், சுற்றம் ஆகியவை, நம்மைச் சூழ்ந்திருக்கும்போது, வாழ்க்கை சுமுகமாகச் செல்லும்போது, பொதுவாக, நம்மைப் பற்றியோ, அடுத்தவரைப் பற்றியோ, இறைவனைப் பற்றியோ, நாம் ஆழமாகச் சிந்திப்பது கிடையாது. ஆனால், நம் வாழ்வில் இழப்புக்கள் நேரும்போது, நம் சிந்தனைகளில் சிக்கல்கள் உருவாகின்றன. அவ்வேளைகளில் நமக்குள் எழும் கேள்விகள், மிக ஆழமாக நம்மை ஊடுருவிச் சென்று, நம்மைப் பற்றியும், நம்மைச் சார்ந்தோரைப் பற்றியும், கடவுளைப் பற்றியும் தேடல்களை மேற்கொள்ள, நம்மைத் தூண்டுகின்றன.

அனைத்தையும் இழக்கும்போது, அல்லது, அனைத்தையும் துறப்பதற்கு நாம் தயாராகும்போது, நமது தேடல் பயணம், பயனுள்ளதாக அமையும் என்பதைக் கூறும் ஒரு சிறுகதை இது. ஆன்மீக எண்ணங்களை, தன் உரைகள் வழியாகவும், நூல்களாகவும் வழங்கிவரும் T.T.ரங்கராஜன் அவர்கள், 'தாயம்' என்ற நூலில் இந்தச் சிறுகதையைக் கூறியுள்ளார்:

"குருவே, தயவு செய்து என்னை உங்கள் சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று ஒருவர் கூறினார். "நீ யார் என்பதை எனக்குச் சொல்," என்று குரு கேட்டார். "ராமச்சந்திர ராவ்" என்று அவர் பதிலளித்தார். "அது உன் பெயர். அதை உதறிவிட்டு நீ யார் என்பதை எனக்குச் சொல்," என்று குரு மீண்டும் கேட்டார். "நான் ஒரு தொழிலதிபர்," என்று அவர் கூறினார். "அது உன் தொழில். அதை விட்டுவிட்டு, நீ யார் என்பதைக் கூறு."

"நான் ஓர் ஆண்."

"அது உன் பாலினம். அதை அகற்றிவிட்டு நீ யார் என்பதைக் கூறு."

"குருவே, இப்போது நான் யார் என்பது எனக்குத் தெரியவில்லை!"

"மிகவும் நல்லது, இதுதான் தேடுபவனுக்கான துவக்கப் பள்ளி. உன் முத்திரைகள் அனைத்தையும் களைந்துவிட்டு, நீ நீயாக மட்டும் வருகிறாய் அல்லவா, அதுதான் தேடுபவனின் துவக்கப் பள்ளி. உன் பெயர் அச்சிடப்பட்ட அட்டை, பூசாரிகளிடம் வேலை செய்யும். ஆனால், கடவுளிடம் அதற்கு எந்த மதிப்பும் கிடையாது," என்று குரு வலியுறுத்தினார்.

நிறுவனங்களில் பணிபுரிவோர், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள் போன்றோர், ஒருவர் ஒருவரைச் சந்திக்கும்போது, தாங்கள் யார் என்பதை அறிமுகப்படுத்த, 'விசிடிங் கார்ட்' அல்லது, 'பிசினஸ் கார்ட்' என்று சொல்லப்படும் அடையாள அட்டைகளைப் பரிமாறிக் கொள்வதைப் பார்த்திருக்கிறோம். தங்கள் பெயர், வாங்கியப் பட்டங்கள், வகிக்கும் பதவிகள் என்ற பல அடையாளங்கள், அந்த அட்டைகளில் அச்சிடப்பட்டிருக்கும். அந்த அட்டைகள் எவ்வளவுக்கெவ்வளவு நிரப்பப்பட்டுள்ளதோ, அவ்வளவுக்கவ்வளவு அவர்கள் முக்கியமானவர்கள் என்பது பொதுவான கணிப்பு.

நமது பிறப்பின் வழியே நம்மை வந்தடையும் ஒரே ஓர் அடையாளம், நாம் மனிதப்பிறவிகள் என்ற அடையாளம் மட்டுமே. ஆனால், வளர, வளர, நாம் சேகரித்துக்கொள்ளும் ஏனைய அடையாளங்கள், பல நேரங்களில், நமது அடிப்படை அடையாளமான 'மனிதப்பிறவி' என்ற இயல்பை மறைத்துவிட, அல்லது, மறந்துவிட வழி வகுக்கின்றன. நாமாகவே சேர்த்துக்கொண்ட அடையாளங்கள், நம்மைவிட்டு விடைபெறும்போது, நமது அடிப்படை அடையாளமான 'மனிதப்பிறவி' என்ற இயல்பு வெளிப்படுகிறது. பலர், அந்த அடிப்படை அடையாளத்தை மறந்துவிட்டு, தாங்கள் சேகரித்த அடையாளங்களிலேயே பல ஆண்டுகள் வாழ்ந்து பழகிப்போனதால், 'மனிதப்பிறவி' என்ற இயல்பான, முதலான, அடிப்படையான அடையாளத்தை, ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.

அனைத்தையும் இழந்து நிற்கும் யோபு, தான் ஏன் பிறந்தோம் என்ற கேள்வியை எழுப்பி, தன் தேடலைத் துவக்குகிறார். தான் பிறக்காமல் போயிருந்தால், நலமாக இருந்திருக்கும் என்று கூறுகிறார். யோபு பகிர்ந்துகொள்ளும் வேதனைமிகுந்த சொற்கள், நம் வாழ்வில் அல்லது, நமக்குத் தெரிந்தவர்கள் வாழ்வில் அவ்வப்போது ஒலித்துள்ளன என்பதை அறிவோம். யோபின் உள்ளத்தைக் கீறி வெளியேறும் இச்சொற்கள் சிலவற்றிற்கு செவிமடுப்போம்:

யோபு நூல் 3: 1-4, 11, 22-24, 26

இதன்பிறகு யோபு வாய்திறந்து, தாம் பிறந்த நாளைப் பழிக்கத் தொடங்கினார். யோபு கூறியது: "ஒழிக நான் பிறந்த அந்த நாளே!... அந்த நாள் இருளாகட்டும்; மேலிருந்து கடவுள் அதை நோக்காதிருக்கட்டும்; ஒளியும் அதன்மேல் வீசாதிருக்கட்டும்.... கருப்பையிலேயே நான் இறந்திருக்கலாகாதா? கருவறையினின்று வெளிப்பட்டவுடனே நான் ஒழிந்திருக்கலாகாதா?

கல்லறை காணின் களிப்பெய்தி அகமகிழ்வோர்க்கு, வாழ்வு வழங்கப்படுவதேன்?  எவருக்கு வழி மறைக்கப்பட்டுள்ளதோ, எவரைச் சுற்றிலும் கடவுள் தடைச்சுவர் எழுப்பியுள்ளாரோ, அவருக்கு ஒளியால் என்ன பயன்? பெருமூச்சு எனக்கு உணவாயிற்று; வேதனைக்கதறல் வெள்ளமாய் ஓடிற்று. எனக்கு நிம்மதி இல்லை; ஓய்வு இல்லை; அமைதி இல்லை; அல்லலே வந்துற்றது."

யோபுக்கு நிகழ்ந்த அனைத்து துன்பங்களுக்கும் இறைவனே காரணம் என்று முடிவு செய்த அவரது மனைவி, "கடவுளைப் பழித்து மடிவதுதானே?" என்று தூண்டிவிட்டாலும், யோபின் உள்ளக்குமுறல்களில் இறைவனைப் பழித்தோ, குறை கூறியோ எதுவும் அவர் சொல்லவில்லை. யோபின் உள்ளத்திலிருந்து வெளியான இந்த அவலக்குரலுக்கு, அவரது நண்பர்கள் ஒவ்வொருவராகப் பதில் சொல்ல முற்படுகின்றனர்.

யோபுக்கும், நண்பர்களுக்கும் இடையே நிகழும் இந்த உரையாடல், மிக உயர்ந்த கவிதை நடையில் அமைந்திருப்பதாலும், அதில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் நம் வழக்கமான எண்ணங்களை, புரட்டிப் போடுவதாலும், பல விவிலிய ஆய்வாளர்களுக்கு சவாலாக இருந்து வருகின்றது. இந்த உரையாடல் வழியே கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் பல நமக்காகக் காத்திருக்கின்றன. தொடர்வோம் நம் தேடல்களை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.