2017-02-28 16:12:00

உரோம் ஆங்கிலிக்கன் சமூகம் திருத்தந்தைக்கு பரிசுகள்


பிப்.28,2017. “இறைவனின் இரக்கம் நிறைந்த இதயத்தைத் திறக்கும் திறவுகோல் செபம்”  என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் பக்கத்தில் இச்செவ்வாயன்று வெளியாயின.

மேலும், ஏழைகளுக்கு உணவு, மனித வர்த்தகத்திற்குப் பலியாகியுள்ள ஆப்ரிக்கப் பெண்களுக்கு விவிலியப் பிரதிகள், ஒரு சிறப்பு தவக்கால இனிப்பு ஆகிய மூன்று பரிசுகளை, உரோம் ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சமூகம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.

உரோம் நகரில், ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபையின் பங்குத்தளம் ஆரம்பிக்கப்பட்டதன் 200ம் ஆண்டையொட்டி, அச்சபையின் அனைத்துப் புனிதர்கள் ஆலயத்திற்கு, இஞ்ஞாயிறு மாலை சென்ற திருத்தந்தையிடம், இப்பரிசுகள் பற்றி கூறப்பட்டது.

உரோம் ஓஸ்தியென்சியே இரயில் நிலையத்தைச் சுற்றி வாழும் ஏழை மக்களுக்கு, ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையும், அப்பகுதியின் அனைத்துப் புனிதர்கள் கத்தோலிக்க பங்குத்தளமும், ஆங்லிக்கன் பங்குத்தளமும் இணைந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரில் உணவு வழங்கவிருப்பதாக, திருத்தந்தையிடம் தெரிவிக்கப்பட்டது.

இந்த 200ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அச்சிடப்பட்ட 200 விவிலிய ஆங்கில மொழிப் பிரதிகளில், ஐம்பதை, மேற்கு ஆப்ரிக்காவில், பாலியல் வன்செயலுக்குப் பலியாகியுள்ள பெண்களுக்கு வழங்குவதாகவும், ஆங்கிலிக்கன் சபை, திருத்தந்தையிடம் தெரிவித்தது. இப்பெண்கள், விவிலியப் பிரதிகளை அடிக்கடி கேட்கின்றனர் என்றும், இப்பெண்கள் மத்தியில் பணியாற்றும் அருள்சகோதரிகள் வழியாக, இவை வழங்கப்படும் என்றும், உரோம் ஆங்கிலிக்கன் சபை மேலும் தெரிவித்தது.

வீடுகளில் தயாரிக்கப்படும் பழ இனிப்புகள், தவக்கால நான்காவது ஞாயிறன்று பாரம்பரியமாகத் தயாரிக்கப்படும் இனிப்பு உட்பட, ஆங்கிலிக்கன் சபையினரின் சில சிறந்த தயாரிப்புப் பொருள்களும் திருத்தந்தையிடம் வழங்கப்பட்டன. இந்தச் சிறப்பு இனிப்பு, யூதாஸ் இஸ்காரியோத்தை தவிர்த்த திருத்தூதர்களைக் குறிக்கும் 11 சிறிய உருண்டைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.