2017-02-27 15:15:00

பாசமுள்ள பார்வையில்..தாயின் செயலில் குழந்தையின் எதிர்காலம்


தமிழகத் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில், குரல்வளம் தேடும் ஓர் இன்னிசை நிகழ்ச்சியில், தமிழக பிரபல இசை அமைப்பாளர் ஒருவரிடம், நடத்துனர் ஒரு கேள்வி கேட்டார். சார், நீங்க வாழ்க்கையில நன்றி சொல்லணும்னா யாருக்குச் சொல்வீங்க என்று. “முதலில் என் அம்மாவுக்கு” என, சட்டென அவர் பதில் சொன்னார். இதற்குக் காரணமும் சொன்னார் அவர். நான் தொழில்நுட்பம் படித்தவன். 31 ஆண்டுகளுக்கு முன்பு, துபாயில் வேலை செய்வதற்காகப் பணமெல்லாம் செலுத்தி, சென்னை விமான நிலையம் வரை சென்றேன். என்னோடு புறப்பட வேண்டியவர்கள் எல்லாம் விமான நிலையத்திற்குள் சென்று விட்டனர். ஆனால் எனக்கு அங்குச் செல்லவே பிடிக்கவில்லை. தமிழ் நாட்டிலே தங்கி சாதிக்க வேண்டுமென்று என் மனது சொல்லிக்கொண்டிருந்தது. அதனால் வீடு திரும்பி, என் அம்மாவிடம் எனது விருப்பத்தைச் சொன்னேன். சரிப்பா என்றார்கள். ஆனால் என் அப்பாவுக்கு கடும் கோபம். இவ்வளவு கஷ்டப்பட்டு, பணம் கட்டி, வேலை வாங்கினேன், கடைசி நேரத்தில், போகமாட்டேன் என்றால் எப்படி? என மிகவும் கவலைப்பட்டு திட்டினார். அப்போது என் அம்மா, சும்மா இருங்க, எம் பிள்ளை பெரிய ஆளா வருவான் என்று, என் அப்பாவைத் தேற்றி, சமாதானப்படுத்தினார். அன்று என் அம்மா கொடுத்த ஆதரவும், ஊக்கமும்தான், இன்று நான் இந்நிலைக்கு உயரக் காரணம் என்றார், அந்த இசை அமைப்பாளர். மகரிஷி வேதாத்திரி அவர்களும், தன் அன்னையின் அருமையை, ஒரு கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். அப்போது எனக்கு மூன்று வயது இருக்கும். நான் தரையில் படுத்துத் தூங்கினால் எறும்பு கடிக்குமோ என்று, என் அன்னை, என்னை, தன் வயிற்றின் மீது போட்டுக்கொண்டே தூங்கினார்கள். வயிற்றின் மீது இருந்த நான், முன்னோக்கி நகர்ந்து, என் அன்னையின் வாயை, தலையால் மோதி விட்டேன். அன்னையின் வாயிலிருந்து இரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. ஆனால், என் அன்னை, தன் வாயிலிருந்து இரத்தம் கொட்டுவதை கையால் பொத்திக்கொண்டு, குழந்தையின் தலையில் அடிபட்டிருக்குமோ? குழந்தைக்கு எவ்வளவு வலிக்குமோ என்று கதறி அழுதார்கள். 

ஒரு நல்ல தாய், நூறு ஆசிரியர்களுக்குச் சமம் என்று, George Herbert Palmer அவர்கள் கூறியுள்ளார். ஆம். வாழும் மானுடத்தின் வணக்கத்துக்குரியவர் அன்னை. தாய்மை, தியாகக் களஞ்சியம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.