2017-02-25 15:23:00

திருத்தந்தை : இரக்கத்தின் கலாச்சாரத்தை ஊக்குவியுங்கள்


பிப்.25,2017.  முன்னேற்றம் என்பது, வெறும் பொருளாதார வளர்ச்சியை வைத்து மட்டுமல்லாமல், ஒவ்வொரு மனிதரின், மற்றும், மனிதரின் ஒருங்கிணைந்த முன்னேற்றத்தை வைத்து கணிக்கப்பட வேண்டுமெனக் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பிரான்ஸ் நாட்டின், “ஒத்துழைப்புக்கான கத்தோலிக்க பிரதிநிதித்துவ குழு (Catholic Delegation for Cooperation)” என்ற அமைப்பின் 29 பிரதிநிதிகளை, இச்சனிக்கிழமை காலையில், திருப்பீடத்தின் திருத்தந்தையர் அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, கடந்த ஐம்பது ஆண்டுகளாக, இக்குழுவினர் ஆற்றிவரும் பணிகளை ஊக்குவித்தார்.

ஒருமைப்பாடு என்ற சொல், சிலவேளைகளில் அதன் பொருளையே இழந்து விடுகின்றது என்றும், உண்மையில், இது, மனத்தாராளத்துடன் செயல்படுவதைவிட ஒருபடி உயர்ந்தது என்றும் விளக்கிய திருத்தந்தை, ஒரு சமூகத்தில் அனைவரும் மதிக்கப்படுவது பற்றி சிந்திக்கும், ஒரு புதிய மனநிலையை அமைத்துக்கொள்வதாகும் என்று தெரிவித்தார்.

இந்தப் பிரெஞ்ச் கத்தோலிக்க குழு, தேவையான இடங்களுக்கு, தன்னார்வலர்களை அனுப்புவது உட்பட, பல்வேறு வழிகளில், பொது நன்மைக்காக, அரசு அதிகாரிகளுடனும் இணைந்து செயல்பட்டு வருகின்றது என்றும் பாராட்டினார், திருத்தந்தை.

இரக்கத்தின் கலாச்சாரத்தில் வளருமாறும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, மற்றவர்களால் புறக்கணிக்கப்படுகின்ற மற்றும், துன்புறுகின்ற மக்களைப் பார்க்கும்போது, அவர்களைப் புறக்கணித்துச் செல்லாமல் இருக்கும் கலாச்சாரம் தேவைப்படுகின்றது என்றும் கூறினார்.

உடன்பிறந்த உணர்வுடன் தெருக்களில் சென்று பணியாற்றுவதற்கும், மக்களிடையேயும், மக்கள் மத்தியிலும், உறவுப் பாலங்களைக் கட்டியெழுப்புவதற்கும், அஞ்ச வேண்டாமெனவும் கூறினார், திருத்தந்தை.

இறைவன் ஒவ்வொருவர் மீது கொண்டிருக்கும், வியத்தகு அன்பையும், இரக்கத்தையும்     அறிவிக்கும் திருஅவைக்கு, தங்களின் திட்டங்கள் மற்றும் செயல்கள் வழியாக இக்குழுவினர் சாட்சியாக விளங்குமாறும், இப்பணியில், இயேசு கிறிஸ்து சக்தி அளிக்கின்றார் எனவும், இந்த பிரெஞ்ச் கத்தோலிக்கக் குழுவிடம் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒத்துழைப்புக்கான கத்தோலிக்க பிரதிநிதித்துவ குழு என்பது, பிரான்சில், திருஅவையால் நடத்தப்படும் ஒரு பன்னாட்டு தன்னார்வப் பணி அமைப்பாகும். இந்த அமைப்பின் தன்னார்வலர்கள், ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில், வளர்ச்சித் திட்டங்களில், தலத்திருஅவைகளுடன் இணைந்து பணியாற்றுகின்றனர்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.