2017-02-24 16:06:00

வெனெசுவேலாவில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும், கர்தினால்


பிப்.24,2017. வெனெசுவேலா நாட்டில் கடந்த ஆண்டில் அறிவிக்கப்பட்ட தேர்தல் பற்றிய வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் மட்டுமே, அரசுக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே இடம்பெறும் உரையாடலில் கத்தோலிக்கத் திருஅவை பங்கு கொள்ளும் என்று, அந்நாட்டு தலத்திருஅவை அதிகாரி ஒருவர் கூறினார்.

கடந்த ஆண்டில் நடத்தப்பட வேண்டிய தேர்தல்கள், இன்னும் நடத்தப்படாமல் உள்ளவேளை இவ்வாறு கூறிய, கரகாஸ் பேராயர், கர்தினால் ஹோர்கே உரோசா சவினா அவர்கள், நாட்டில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் மற்றும், அரசு ஏற்றுக்கொண்ட ஒப்பந்தங்கள் மதிக்கப்பட்டு, அமல்படுத்தப்பட வேண்டும் எனக் கூறினார்.

இதற்கிடையே,  வெனெசுவேலாவைத் தொடர்ந்து பாதித்துவரும் கடும் பொருளாதார நெருக்கடியால், 82 விழுக்காட்டு மக்கள் வறுமையிலும், 52 விழுக்காட்டு மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழும் வாழ்கின்றனர்.

2014ம் ஆண்டிலிருந்து 2016ம் ஆண்டுவரை, நாட்டில் வறுமையில் வாடுவோரின் நிலை, 48 விழுக்காட்டிலிருந்து 82 விழுக்காடாக உயர்ந்துள்ளது. 2015ம் ஆண்டில், நாட்டின் பணவீக்கம், 180.9 விழுக்காடாக இருந்ததென, மத்திய வங்கி கூறியது.

ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.