2017-02-24 16:00:00

மைக்ரோ பிளாஸ்டிக் பொருள்கள் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தல்


பிப்.24,2017. கடல்களுக்கு கடும் சேதங்களை ஏற்படுத்தும், மைக்ரோ பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்குமாறு, UNEP என்ற, ஐ.நா.வின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு, உலகின் அனைத்து மக்களையும் கேட்டுக்கொண்டுள்ளது.

மைக்ரோ பிளாஸ்டிக் பொருள்கள், இந்தோனேசியக் கடற்பகுதியிலும், வட துருவத்திலும், அதிகமாகக் குவிந்து கிடக்கின்றன என்று கூறும் இந்த அமைப்பு, இந்தப் பொருள்களின் அளவு, வான்வெளியிலுள்ள விண்மீன் கூட்டங்களின் எண்ணிக்கையையும் தாண்டிவிடும் அளவுக்கு உள்ளது என்றும் எச்சரித்துள்ளது.

மைக்ரோ பிளாஸ்டிக் பொருள்கள், தொழிற்சாலைகளிலும், சமுதாயங்களிலும், பயன்படுத்தப்படுவதைத் தடை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ள ஐ.நா.வின் சுற்றுச்சூழல் அமைப்பு, ஏனைய பிளாஸ்டிக் பொருள்களையும், 2022ம் ஆண்டுக்குள், தடைசெய்யுமாறும் வலியுறுத்தியுள்ளது.

2050ம் ஆண்டுக்குள், இப்பூமியின் 99 விழுக்காட்டு கடல்பறவைகள், பிளாஸ்டிக் பொருள்களை தங்கள் உடலுக்குள் கொண்டிருக்கும் என எச்சரித்துள்ளது, ஐ.நா.வின் சுற்றுச்சூழல் அமைப்பு. 

மைக்ரோ பிளாஸ்டிக் என்பவை, சுற்றுச்சூழலில் காணப்படும் ஒரு மில்லி மீட்டருக்கும் குறைவான சிறிய பிளாஸ்டிக் பொருள்கள் ஆகும். இவை, அழகு சாதனப்பொருட்கள், ஆடைகள் மற்றும், தொழிற்சாலை கழிவுகளிலிருந்து வருபவையாகும்.  

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.