2017-02-24 15:42:00

கிறிஸ்தவ இதயம் எப்பொழுதும் மகிழ்வால் நிறைந்திருக்கின்றது


பிப்.24,2017. “கிறிஸ்தவ இதயம் எப்பொழுதும் மகிழ்வால் நிறைந்திருக்கின்றது. எப்பொழுதும், மகிழ்வு ஒரு கொடையாகப் பெறப்பட்டது, இது, எல்லாருடனும் பகிர்ந்துகொள்வதற்காகவே வழங்கப்பட்டுள்ளது” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில் இவ்வெள்ளியன்று வெளியிடப்பட்டன.

மேலும், 2016ம் ஆண்டில், நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட மத்திய இத்தாலியின் பொருளாதாரத்திற்கு ஆதரவு வழங்கும் நோக்கத்தில், அப்பகுதி விவசாயிகளால் உற்பத்தி செய்யப்பட்ட உணவுப்பொருள்களை வாங்கி வருகிறது வத்திக்கான்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அறிவுரையின்படி, திருத்தந்தையின் தர்மச் செயல்களை எடுத்து நடத்தும் பேராயர் Konrad Krajewski அவர்கள், வீடற்றவர்க்கு உணவு வழங்குவதற்கு, மத்திய இத்தாலியின் விவசாயிகளிடமிருந்து உணவுப் பொருள்களை, பெருமளவில் வாங்கியிருக்கிறார் என்று, திருப்பீடம் அறிவித்துள்ளது.

இறைச்சி, பாலாடைக்கட்டிகள், திராட்சை இரசம் ஆகிய உணவுப் பொருள்களை, பேராயர் Krajewski அவர்கள், அப்பகுதி ஆயர்களின் உதவியுடன் வாங்கியுள்ளார் எனவும், திருப்பீடம் கூறியுள்ளது.

மத்திய இத்தாலியில், 2016ம் ஆண்டில், நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் தொழில், மிகவும் ஆபத்தான சூழலில் இருப்பதால், அவர்களுக்கு உதவும் நோக்கத்தில், திருத்தந்தை இந்நடவடிக்கையை எடுத்துள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.