2017-02-23 15:47:00

யூதர்கள் திருத்தந்தைக்கு வழங்கிய 'தோரா'வின் புதிய பதிப்பு


பிப்.23,2017. 'வாழும் இறைவனின் வாழ்விக்கும் பாடங்கள்' என்று புனித 2ம் ஜான்பால் அவர்களால் அழைக்கப்பட்ட 'தோரா' (The Torah) என்ற நூல், இறைவனின் அன்பை சொல்லாலும், செயலாலும் வெளிப்படுத்துகின்றது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானில், இவ்வியாழன் காலை நிகழ்ந்த ஒரு சந்திப்பில் கூறினார்.

இறைவாக்கினர் மோசே வழங்கிய ஐந்து நூல்களின் தொகுப்பான 'தோரா'வின் புதிய பதிப்பு ஒன்றை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு வழங்க, வத்திக்கானுக்கு வருகை தந்த யூத பிரதிநிதிகளை வரவேற்று, நன்றி கூறியத் திருத்தந்தை, இவ்வாறு கூறினார்.

ஆர்ஜென்டீனா நாட்டின், புவனஸ் அயிரஸ் நகரில் யூத மத குருக்களைப் பயிற்றுவிக்கும் இல்லத்தின் தலைவரும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நெடுநாளைய நண்பருமான ரபி ஆபிரகாம் ஷோர்கா அவர்களின் தலைமையில், யூத மதப் பிரதிநிதிகள், வத்திக்கானுக்கு வருகை தந்து, புதிய பிரதியை திருத்தந்தைக்கு அளித்துள்ளனர்.

இவ்வுலகைப் பிரித்து, போட்டிகளை உருவாக்கும் மனித வார்த்தைகளுக்கு நடுவே, இறைவன், 'தோரா' வடிவில், மோசே வழியே வழங்கிய இறை வார்த்தைகள், மனித குலத்தை இணைக்கவும், வளர்க்கவும் உதவுகின்றன என்று, திருத்தந்தை தன் உரையில் குறிப்பிட்டார்.

யூத மதப் பிரதிநிதிகள், இந்தப் புதிய 'தோரா' பதிப்பை தனக்கு வழங்குவதை, கிறிஸ்தவர்களுக்கும், யூதர்களுக்கும் இடையே வளர்ந்துவரும் உரையாடல் முயற்சிகளின் ஓர் அடையாளமாக தான் ஏற்றுக்கொள்வதாக, திருத்தந்தை, தெரிவித்தார்.

அனைத்து உலகச் செல்வங்களையும் கடந்த ஆன்மீக செல்வத்தை வழங்கும் இறை வார்த்தை, நம் வாழ்வையும், பணிகளையும் வழிநடத்துவதாக என்ற ஆசி மொழிகளுடன் திருத்தந்தை தன் உரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.