2017-02-23 15:39:00

நன்றியுள்ளம் கொண்டிருப்பது, விளையாட்டு வீரருக்கு அழகு


பிப்.23,2017. கால் பந்தாட்டம், ஏனைய விளையாட்டுக்களைப் போலவே, வாழ்வுக்கும், சமுதாயத்திற்கும் ஒரு பிம்பமாக அமைந்துள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த கால்பந்தாட்டக் குழுவினரிடம் கூறினார்.

இஸ்பானிய நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற கால்பந்தாட்டக் குழுக்களில் ஒன்றான, விய்யரெயால் (Villarreal) குழுவின் நிர்வாகிகள், மற்றும், விளையாட்டு வீரர்கள் என 50க்கும் அதிகமானோரை, இவ்வியாழன் காலை, வத்திக்கான், சான் கிளமெந்தீனா அரங்கத்தில் சந்தித்தத் திருத்தந்தை, இவ்வாறு கூறினார்.

எந்த ஒரு விளையாட்டிலும், தனிப்பட்டவர் திறமைகளும், குழுவாக இயங்கும் மனநிலையும் தேவைப்படுகின்றன என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திறமைகளை வளர்க்க அதிக நேரம் செலவிடுவதுபோல், குழு மனப்பான்மையை வளர்க்கவும் நேரம் ஒதுக்குவது அவசியம் என்று எடுத்துரைத்தார்.

விளையாட்டு வீரர்களை, இளையோர் அதிக அளவில், ஆர்வமாகப் பின்பற்றுவதால், நல்ல மதிப்பீடுகளை இளைய தலைமுறைக்கு வழங்கும் பொறுப்பு விளையாட்டு வீரர்களைச் சார்ந்தது என்று திருத்தந்தை தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

நன்றியுள்ள உள்ளம் கொண்டிருப்பது, எந்த ஒரு விளையாட்டு வீரரையும், தனித்து அடையாளப்படுத்தும் ஒரு பண்பு என்று குறிப்பிட்டத் திருத்தந்தை, வீரர்கள், உலக அளவில் உயர்ந்து நிற்பதற்கு அவர்களுக்கு ஏணிப்படிகளாய் விளங்கிய சிறுவயது தோழர்கள், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், இரசிகர்கள் ஆகிய அனைவரையும் நன்றியோடு எண்ணிப் பார்ப்பது முக்கியம் என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.