2017-02-23 15:46:00

தேர்தலையொட்டி, அயர்லாந்து ஆயர்கள் விடுத்துள்ள அறிக்கை


பிப்.23,2017. நலமான, நேர்மறை எண்ணங்களைக் கொண்ட, அமைதி நிறைந்த சமுதாயத்தை அரசியல்வாதிகள் உருவாக்குவர் என்ற நம்பிக்கையில் அயர்லாந்து மக்களாகிய நாங்கள் வாழ்ந்து வருகிறோம் என்று, அயர்லாந்து ஆயர் பேரவையின் அறிக்கையொன்று கூறுகிறது.

மார்ச் மாதம் 2ம் தேதி, அயர்லாந்து நாட்டில் நடைபெறவிருக்கும் தேர்தலையொட்டி, வடக்கு அயர்லாந்து ஆயர்கள் விடுத்துள்ள அறிக்கையில், கருத்து வேறுபாடுகளால் சட்டப்பேரவை தன் முழுமையான கால அளவை நிறைவு செய்யாமல் கலைந்துபோனது, மக்களிடையே கலக்கத்தை உருவாக்கியுள்ளது என்று, ஆயர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.

அமைதியை விரும்பும் ஒரு சமுதாயமாக அயர்லாந்தை உருவாக்கிய முன்னோர்களின் வழிகளை மறந்து, அண்மைக் காலங்களில் வெறுப்பை வளர்க்கும் விவாதங்களும், சொல்லாடல்களும் சட்டப்பேரவையில் பயன்படுத்தப்படுவதைக் கண்டு தாங்கள் வருந்துவதாக ஆயர்களின் அறிக்கை எடுத்துரைக்கிறது.

அயர்லாந்து தலத்திருஅவையின் தலைவரான பேராயர் ஈமோன் மார்ட்டின் அவர்களும், ஏனைய ஆயர்களும் கையொப்பமிட்டு அனுப்பியுள்ள இவ்வறிக்கையில், மக்கள் தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு ஒரு சில வழிமுறைகளைக் கூறியுள்ளனர்.

"வாழ்வு கலாச்சாரம், அனைவருக்கும் நம்பிக்கை, என்பனவற்றை நோக்கி நல்லதொரு எதிர்காலம்" என்ற தலைப்பில், ஆயர்கள் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க சில பரிந்துரைகளை வழங்கியுள்ளனர்.

ஆதாரம் : ICN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.