2017-02-22 15:41:00

‘விண்ணகத்தைத் திறக்க மட்டுமே, மூடுவதற்கல்ல’ - திருத்தந்தை


பிப்.22,2017. "இயேசு, விண்ணகத்தின் திறவுகோலை, பேதுருவிடம் கொடுத்தது, விண்ணகத்தைத் திறப்பதற்காக மட்டுமே, அதை மூடுவதற்காக அல்ல" என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 22, இப்புதனன்று, தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டார்.

பிப்ரவரி 22, திருத்தூதர் பேதுருவின் தலைமைப்பீடம் திருவிழா கொண்டாடப்பட்டதையொட்டி, திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி, @pontifex என்ற முகவரியில், ஒன்பது மொழிகளில், இவ்வாறு வெளியிடப்பட்டது.

மேலும், பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் 2016ம் ஆண்டு ஜூலை மாதம் நிகழ்ந்த ஒரு வன்முறை தாக்குதலில் உயிரிழந்த இத்தாலியர்களின் குடும்பத்தினரை, இப்புதன் மறைக்கல்வி உரைக்கு முன்னதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனியே சந்தித்து ஆறுதல் வழங்கினார்.

டாக்கா நகரில், சென்ற ஆண்டு ஜூலை முதல் தேதியன்று, Holey Artisan Bakery என்ற உணவகத்தில், தீவிரவாதிகள், பிணையக் கைதிகளாக பலரைப் பிடித்து, பின்னர், அவர்களில் 24 பேரைக் கொன்றனர். இவர்களில், 9 பேர் இத்தாலியர்கள்.

இறந்த இத்தாலியர்களின் குடும்பங்களை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர், ஆயர் Valentino Di Cerbo அவர்களோடு சேர்ந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, அருளாளர் ஆறாம் பவுல் அரங்கத்தின் ஓர் அறையில், இப்புதன் காலை 9.30 மணியளவில் சந்தித்தனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.