2017-02-21 15:21:00

கத்தோலிக்க எழுத்தாளரை நாடு கடத்திய வியட்நாம் அரசு


பிப்.21,2017. வியட்நாம் கத்தோலிக்க அருள்பணியாளர்கள் மற்றும் துறவறத்தாரின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில், செய்தியாளராகப் பணியாற்றிவந்த ஒருவரை, பிரான்சுக்கு நாடு கடத்தியுள்ளது வியட்நாம் அரசு.

கத்தோலிக்கச் செய்தியாளராகப் பணியாற்றியபோது, தேசத்துரோகக் குற்றமிழைத்தார் என குற்றம் சுமத்தப்பட்டு 2012ம் ஆண்டில், 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட Dang Xuan Dieu என்பவரை தற்போது விடுதலைச் செய்து உடனடியாக நாடு கடத்தியுள்ளது வியட்நாம் அரசு.

கடந்த ஐந்து ஆண்டுகளாக சிறைவைக்கப்படிருந்த Xuan Dieu அவர்கள், பல்வேறு வகையில் சித்ரவதைகளை அனுபவித்துள்ளதாக, அவரே பத்திரிகைப் பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

உடலளவில் தன்னைக் கொடுமைப்படுத்திய சிறைக்கைதி ஒருவருடன், சங்கிலியால் பிணைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்ததாகவும், சிறை அதிகாரிகள் தன்னை மூர்க்கமாக அடித்ததாகவும் உரைத்தார் Xuan Dieu.

நாட்டைவிட்டு வெளியேறவேண்டும் என்ற முன்நிபந்தனையின்பேரில் விடுவிக்கப்பட்ட Xuan Dieu அவர்கள், உடனடியாக விமானத்தில் ஏற்றப்பட்டு, பிரான்சுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

ஆதாரம்: UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.