2017-02-20 15:18:00

பாசமுள்ள பார்வையில்.. அன்பே தாய்


தாயின் தியாகத்தைக் காலம் கடந்து தெரிந்துகொண்ட மகன் சொல்கிறான்...

கைம்பெண்ணான என் தாய்க்கு நான் ஒரே மகன். பாசிகள் பொறுக்கி, அதைத் தினமும் சந்தையில் விற்று என்னைக் காப்பாற்றி வந்தார் என் தாய். ஒரு கண்ணை மட்டுமே கொண்டிருந்த என் தாயைப் பார்க்கவே எனக்குப் பிடிக்காது. நான் ஆரம்பப் பள்ளி படித்த சமயம், ஒருநாள், எங்கள் பள்ளியில் இசை நிகழ்ச்சி நடந்தது. அதற்கு என் தாய் வந்தார். வெறுப்புப் பார்வையாலே அந்த இடத்திலிருந்து அவரை நான் விரட்டி விட்டேன். மறுநாள் என் வகுப்பு மாணவர்கள், உன் தாய்க்கு ஒரு கண் என்று, கிண்டலடித்தார்கள். அன்று வீட்டிற்கு வந்த நான், “அம்மா, நீ ஏன் இன்னொரு கண்ணையும் கொண்டிருக்கக் கூடாது? நீ செத்தால் என்ன?” என கோபமாகச் சொன்னேன். என் தாய் பதிலே சொல்லவில்லை. அன்று இரவு தண்ணீர் குடிக்க சமையல் கட்டுக்குச் சென்றேன். எனது உறக்கம் கலைந்துவிடும் என்று நினைத்தாரோ என்னவோ, சப்தமின்றி கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தார் என் தாய். எனது ஒற்றைக் கண் தாயையும், எனது கடும் வறுமையையும் வெறுத்ததால், அன்று ஒரு சபதம் எடுத்தேன். கஷ்டப்பட்டு படித்தேன். வீட்டை விட்டு வெளியேறி வேறு நாடு சென்றேன். உயர்கல்வி படித்தேன். நல்ல வேலையும் கிடைத்தது. சொந்தமாக வீடு வாங்கினேன். திருமணமும் செய்துகொண்டேன். குழந்தைகளும் பிறந்தனர். தாயின் நினைப்பே இல்லாமல், வெற்றிபெற்ற மனிதனாக, மகிழ்வாக வாழ்ந்துகொண்டிருந்தேன். திடீரென ஒருநாள், நான் எதிர்பாராத நேரத்தில், என் தாய் என்னைப் பார்க்க வந்தார். அவரைப் பார்த்ததும், என் பிள்ளைகள்  பயந்து ஓடி ஒளிந்தனர். யார் நீ? எதற்காக இங்கு வந்தாய்? என, கோபக் கேள்விகளால் விளாசினேன். அப்போது அவர் அமைதியாக, “மன்னிக்கவும், நான் முகவரி தவறி வந்துவிட்டேன்” என்று சொல்லிச் சென்று விட்டார். பின்னர் ஒருநாள், பழைய மாணவர் சங்க விழாவுக்கு. எனது ஊர் பள்ளியிலிருந்து அழைப்பு வந்தது. தொழில் சம்பந்தமாக வெளியூர் செல்கிறேன் என்று என் மனைவியிடம் பொய் சொல்லிவிட்டு எனது சொந்த ஊர் சென்று நிகழ்விலும் கலந்துகொண்டேன். பின்னர், எனது பழைய வீட்டுப் பக்கம் வேண்டா வெறுப்போடு சென்றேன். அங்கே தரையில் என் தாயின் உடலைக் கண்டேன். என்னைப் பார்த்ததும், எனது உறவினர் ஒருவர், கடிதம் ஒன்றைக் கொடுத்தார். தான் இறந்த பின்னர், மகன் வந்தால் மட்டும், இக்கடிதத்தைக் கொடுக்குமாறு, என் தாய் சொல்லியதாகவும் அறிந்தேன். அதைப் பிரித்து வாசித்தேன். “அன்பின் மகனே!.. எனக்கு ஒரு வாழ்க்கை வேண்டும் என்று நினைத்திருந்தால், நான் இன்னொரு திருமணம் முடித்து நன்றாக வாழ்ந்திருப்பேன். உனக்காகவே நான் வாழ்ந்தேன். நீ என்னிடம் வெறுப்புடன் நடந்துகொண்டபோதெல்லாம், உனது உள்ளத்தின் உணர்வுகளைப் புரிந்துகொண்டேன். நீ பள்ளிக்கு வருகிறாய் என்று தெரிந்தும், என்னைப் பார்க்க உனக்குப் பிடிக்காது என்பதால், அங்கு நான் வரவில்லை. நான் ஒற்றைகண் பெண். ஏன் தெரியுமா? என் மகனே, நீ, சிறு பருவத்தில், விளையாடிக்கொண்டிருந்த நேரத்தில், ஒரு விபத்தில், உனது ஒரு கண்ணின் பார்வைபோய் விட்டது. இன்னொரு வெண்படலம் இருந்தால் மட்டுமே, உனக்குப் பார்வை மீண்டும் கிடைக்கும் என மருத்துவர்கள் சொன்னார்கள். அதனால், என் ஒரு கண்ணை, உடனடியாக உனக்குத் தானம் செய்தேன். என் கண்மணியே, இன்று நீ இந்த உலகத்தைப் பார்ப்பதும், இந்த வாழ்வை வாழ்வதும் என் கண்ணாலேயே. உனக்கு இதுவும் அவமானம் என்றால், உனது வலது கண்ணைப் பிடுங்கி எறிந்துவிடு. மனமிருந்தால் அப்படியே விட்டுவிடு. அந்தக் கண்களால் நான் உன்னை என்றென்றும் பார்த்துகொண்டிருப்பேன். இப்படிக்கு, என்றுமே அன்புள்ள, உன் ஒற்றைக்கண் அம்மா”.

இது ஓர் உண்மை நிகழ்வாக, இணையதளத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அன்பே தாய் என்பது, எவ்வளவு நிதர்சமான உண்மை! நினைத்தபோது இறைவனைக் காணத்தான், இறைவன் தாயைப் படைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.