2017-02-20 16:53:00

கடவுளின் பெயரால் வன்முறைகள், மதத்தையே மாசுபடுத்துகின்றன


பிப்.20,2017. வன்முறைகளிலிருந்து குடிமக்களைக் காப்பாற்ற முடியாத பாகிஸ்தான் அரசின் நிலை குறித்து மக்கள் கோபமுற்றிருப்பதாகவும், வன்முறைகளின் முன்னால் தங்களின் இயலாமை குறித்து அச்சம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார், லாகூரின் சாந்தா மரியா அருள்பணி இல்ல இயக்குனர், அருள்பணி Inayat Bernard.

இனம் மதம், கலாச்சாரம் என்ற பிரிவுகளைத் தாண்டி, அனைவரும் மனிதர்கள் என்ற கண்ணோட்டத்தில் இது நோக்கப்பட வேண்டும் என அழைப்புவிடுத்த அருள்பணி பெர்னார்டு அவர்கள், அப்பாவி மக்களுக்கு எதிரான அண்மை வன்முறைகளை கிறிஸ்தவ சமூகம் வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்தார். அண்மையில் லாகூரில் இடம்பெற்ற தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததையும், Sehwanலிலுள்ள சூஃபி மசூதியில் இடம்பெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 20 குழந்தைகள் உட்பட 80 பேர் உயிரிழந்ததையும் பற்றிக் குறிப்பிட்ட அருள்பணி பெர்னார்டு அவர்கள், அரசு, போதிய பாதுகாப்பு வழங்காமையால், மத வழிபாட்டுத் தலங்களுக்கு தனியார் பாதுகாப்பை நாட வேண்டியுள்ளது என்றார்.

கடவுளின் பெயரால் வன்முறைகளை நிகழ்த்துவது, அந்த மதத்தையே மாசுபடுத்துகின்றது என்பதையும் வலியுறுத்திய சாந்தா மரியா அருள்பணி இல்ல இயக்குனர், பயங்கரவாதத்திற்கு எதிராக, கடுமையான நடவடிக்கைகளை எடுக்க அரசு தயங்கி வருவது குறித்த கவலையையும் வெளியிட்டார்.

ஆதாரம் : CNA/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.