2017-02-18 14:40:00

புலம்பெயர்ந்தவர் மற்றும், வெளிநாட்டவரை வரவேற்க அழைப்பு


பிப்.18,2017.  “நாமும் அந்நியர் என்பதை நினைவுபடுத்தி, புலம்பெயர்ந்தவர் மற்றும், வெளிநாட்டவரை, நாம் வரவேற்க வேண்டுமென்று, விவிலியத்தில், நம் ஆண்டவர், எத்தனைமுறை கேட்டுள்ளார்!” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் பக்கத்தில், இச்சனிக்கிழமையன்று வெளியாயின.

உலகமயமாக்கப்பட்ட புறக்கணிப்புக் கலாச்சாரத்திற்கு எதிராக, அடிக்கடி குரல் எழுப்பி, புலம்பெயர்ந்தோரை வரவேற்குமாறு கூறிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்றும், தனது டுவிட்டரில், இதே கருத்தையே வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே, சிரியா உள்ளிட்ட ஏழு முஸ்லிம் நாடுகளின் பயணிகள், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குள் வருவதற்குத் தடை விதிக்கும் வகையில், வருகின்ற வாரம் புதிய ஆணை பிறப்பிக்கப்படும் என்று, அரசுத்தலைவர் டொனால்டு ட்ரம்ப் அவர்கள் தெரிவித்துள்ளார்.

சிரியா, ஈராக், ஈரான், லிபியா, ஏமன், சொமாலியா, சூடான் ஆகிய நாடுகளின் புலம்பெயர்ந்த மக்களும், பயணிகளும் அமெரிக்காவில் நுழைய தடை விதித்து அரசுத்தலைவர் ட்ரம்ப் அவர்கள், கடந்த சனவரி 27-ம் தேதி உத்தரவிட்டார். இதனால் ஏறக்குறைய அறுபதாயிரம் விசாக்கள் ரத்து செய்யப்பட்டன.

அமெரிக்க அரசுத்தலைவரின் இந்த உத்தரவை எதிர்த்து, பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. சியாட்டிலில் உள்ள மாவட்ட நீதிமன்றம் அரசுத்தலைவர் ட்ரம்பின் தடையை நீக்கி உத்தரவிட்டது. இதை எதிர்த்து மேல்நீதிமன்றத்தில் அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாஷிங்டனில், செய்தியாளர்களிடம் பேசிய அரசுத்தலைவர் ட்ரம்ப் அவர்கள், சிரியா உட்பட, ஏழு நாடுகளின் பயணிகளுக்குத் தடை விதிக்கும் வகையில் அடுத்த வாரம் புதிய ஆணை பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

புதிய தடை உத்தரவு குறித்து அரசுத்தலைவர் மாளிகை வட்டாரங்கள் கூறியபோது, நீதிமன்றத்தால் தடை விதிக்க முடியாத வகையில் புதிய சட்டம் வரையறுக்கப்படும் என்று தெரிவித்தன.

மேலும், திருப்பீடத்திற்கும், கானாவுக்கும் இடையே தூதரக உறவுகள் உருவாக்கப்பட்டதன் நாற்பதாம் ஆண்டு நிறைவு, கானா நாட்டின் அறுபதாவது சுதந்திர தினம் ஆகிய நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கு, தனது சிறப்பு பிரதிநிதியாக, கர்தினால்   ஜூசப்பே பெர்த்தெல்லோ (Giuseppe Bertello) அவர்களை நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கான் நகர நாட்டின் நிர்வாகத் தலைவரான கர்தினால் Giuseppe Bertello அவர்கள், வருகிற மார்ச் 3ம் தேதி முதல், 6ம் தேதி வரை கானாவில் நடைபெறும் இந்நிகழ்வுகளில் கலந்துகொள்வார் என, திருப்பீடம் அறிவித்துள்ளது. 

மேற்கு ஆப்ரிக்க நாடான கானா, 1957ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி, பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரமடைந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.