2017-02-16 15:47:00

"போரிலும், அமைதியிலும், இராணுவ ஆன்மீகப் பணியாளர்கள் பங்கு"


பிப்.16,2017. இராணுவத்தில் பணியாற்றுவோரின் பல்வேறு தேவைகளை, குறிப்பாக, அவர்களது ஆன்மீகத் தேவைகளை நிறைவேற்றுவதில் கத்தோலிக்கத் திருஅவை எப்போதும் அக்கறை கொண்டுள்ளது என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

"போர்ச் சூழல்களிலும், அமைதி நிலவும் காலங்களிலும், இராணுவத்தில், ஆன்மீகப் பணியாளர்களின் பங்கு" என்ற தலைப்பில், வியன்னாவில், பிப்ரவரி 15, இப்புதனன்று நடைபெற்ற ஒரு பன்னாட்டு கருத்தரங்கில், திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்ற அருள்பணி, Janusz Urbańczyk அவர்கள் வழங்கிய உரையில், இவ்வாறு கூறினார்.

எந்த ஒரு போரும், இராணுவ வீரர்களின் உள்ளங்களில் நீடித்த பாதிப்புக்களை உருவாக்குகிறது என்பதை உணர்ந்த கத்தோலிக்கத் திருஅவை, போர் காலம் முடிந்தபின்னரும், இராணுவ வீரர்களுடன் இணைந்து செல்வதையும், அவர்களை வழிநடத்துவதையும் முக்கியமெனக் கருதியுள்ளது என்று அருள்பணி Urbańczyk அவர்கள், எடுத்துரைத்தார்.

இராணுவ ஆன்மீகப் பணியாளர்கள் என்ற அமைப்பு, உலகெங்கும் 36 இடங்களில் உள்ளது என்றும், இவற்றில், 2,500க்கும் அதிகமான அருள்பணியாளர்கள், ஆன்மீகப் பணியாளர்களாகச் செயலாற்றி வருகின்றனர் என்றும் அருள்பணி Urbańczyk அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.