2017-02-16 15:44:00

சமுதாயத்தின் ஓரங்களில் வாழ்வோரிடையே மறைபரப்புப் பணி


பிப்.16,2017. சமுதாயத்தின் ஓரங்களில் வாழ்வோர் நடுவே, திருஅவையின் மறைபரப்புப் பணியின் இதயத் துடிப்பு அமைந்துள்ளது என்றும், மக்கள் நம் அன்பை உணரும்போது, அவர்களின் உள்ளங்கள், நற்செய்தியைக் கேட்பதற்குத் திறக்கப்படுகின்றன என்றும், வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

"பொதுநிலையினரும், மறைபரப்புப் பணியும்" என்ற தலைப்பில், பிப்ரவரி 13, இத்திங்கள் முதல், 18 வருகிற சனிக்கிழமை முடிய உரோம் நகரில் நடைபெறும் ஒரு கருத்தரங்கில், நற்செய்தி பரப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் பெர்னாண்டோ பிலோனி அவர்கள் வழங்கிய உரையில் இவ்வாறு கூறினார்.

மறைபரப்புப் பணி என்பது, குறிப்பிட்ட இடங்களைச் சார்ந்தது அல்ல, மாறாக, அது மனித வாழ்வின் பல நிலைகளையும் சார்ந்தது என்பதை 2ம் வத்திக்கான் சங்கம் உணர்த்தியுள்ளது, என்று கூறிய கர்தினால் பிலோனி அவர்கள், இப்பணியில் அருள்பணியாளரும், துறவியரும், மட்டுமே ஈடுபடவேண்டும் என்ற எண்ணமும் மாறி, திருமுழுக்கு பெற்ற அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் மறைபரப்புப் பணியாற்றும் கடமை உள்ளது என்று கூறினார்.

பாப்பிறை மறைபரப்புக் கழகம், மற்றும், மறைபரப்புப் பணியை ஊக்குவிக்கும் அகில உலக மையம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ள இக்கருத்தரங்கில், ஸ்பெயின், மற்றும் இலத்தீன் அமெரிக்காவின் கொலம்பியா, பொலிவியா, சிலே, ஆர்ஜென்டீனா, உருகுவே நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர் என்று பீதேஸ் செய்திக்குறிப்பொன்று கூறுகிறது. 

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.