2017-02-15 15:18:00

மண்ணின் மைந்தர்கள் தனித்துவம் காக்க திருத்தந்தை அழைப்பு


பிப்.15,2017. மண்ணின் மைந்தர்கள் தனித்துவத்தையும், அவர்களின் நிலங்களையும் எவ்விதம் பாதுகாப்பது என்பதை உள்ளடக்கியதாக, நமது சமுதாய, கலாச்சார முன்னேற்றம் அமையவேண்டும் என்பது, நமக்கு முன்னிருக்கும் சவால் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த பன்னாட்டு அமைப்பின் பிரதிநிதிகளிடம் கூறினார்.

வேளாண்மை முன்னேற்றத்தின் பன்னாட்டு நிதி உதவி அமைப்பு, உரோம் நகரில் நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதன் காலை 9 மணியளவில், வத்திக்கானில் சந்தித்து உரையாடிய வேளையில் இவ்வாறு கூறினார்.

பழங்குடியினர் வாழும் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் திட்டங்கள், பூமிக் கோளத்துடன் அவர்கள் தொன்றுதொட்டு கொண்டிருக்கும் உறவையும், அவர்களது கலாச்சாரத்தையும் மதிக்கும் வண்ணம் உருவாக்கப்படவேண்டும் என்று, திருத்தந்தை தன் உரையில், வேண்டுகோள் விடுத்தார்.

பழங்குடியினர் வாழும் நிலங்களில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தையும் அவர்களிடம் விளக்கிக் கூறி, அவர்களது சம்மதம் பெற்றபின்னரே அம்முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று, மண்ணின் மைந்தர்கள் அனைத்துலக ஒப்பந்தம் 32ம் விதிமுறை கூறுவதையும், திருத்தந்தை தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

தொழில்நுட்ப, பொருளாதார முன்னேற்றங்கள், நாம் வாழும் இந்த பூமியை இன்னும் வளப்படுத்தவும், மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் வழி செய்யவேண்டும் என்பதை, வேளாண்மை முன்னேற்றத்தின் பன்னாட்டு நிதி உதவி அமைப்பு உறுதி செய்யவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பன்னாட்டு பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.