2017-02-15 15:54:00

மக்களின் உண்மையானத் தேவைகளைப் புரிந்து செயல்பட அழைப்பு


பிப்.15,2017. அரசியலில் ஈடுபட்டிருக்கும் அனைவரும், மக்களின் உண்மையானத் தேவைகளை சரிவரப் புரிந்துகொண்டு, நடைமுறைக்குகந்த, உறுதியான பதில்களை அளிக்கவேண்டும் என்று, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், இத்தாலியத் தொலைக்காட்சிக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Tg1 என்ற தொலைக்காட்சிக்கு கர்தினால் பரோலின் அவர்கள் அளித்த இந்த பேட்டி, பிப்ரவரி 13, மாலை ஒளிபரப்பானது.

இப்பேட்டியின் துவக்கத்தில் வேலையில்லா திண்டாட்டம் குறித்து பேசிய கர்தினால் பரோலின் அவர்கள், இளையோரை அதிகமாகப் பாதிக்கும் இப்பிரச்னையை, மிகத் துரிதமாகக் களைவது, உலகின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று எடுத்துரைத்தார்.

தங்கள் நாட்டையும், மக்களையும் காப்பதாகக் கூறிக்கொண்டு, அன்னியரைத் தடுத்து நிறுத்தும் போக்கு, உலகின் பல்வேறு நாடுகளில் வளர்ந்துள்ளது என்பதை, கவலையுடன் எடுத்துரைத்த கர்தினால் பரோலின் அவர்கள், எல்லைகளை மூடுவது, ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பாதகமாக அமையும் என்று கூறினார்.

அச்சம் என்ற உணர்வை மூலதனமாக்கி, அரசியல் செய்வோர், அச்சம் என்றுமே நல்வழி காட்டியதில்லை என்ற உண்மையை விரைவில் உணர்ந்துகொள்வது, இவ்வுலகிற்கு நல்லது என்று கர்தினால் பரோலின் அவர்கள், தன் பேட்டியில் வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.