2017-02-15 15:47:00

பாத்திமா திருத்தூதுப் பயணத்தின் இலச்சினை வெளியீடு


பிப்.15,2017. இவ்வாண்டு மேமாதம் 12, 13 ஆகிய நாள்களில் பாத்திமா திருத்தலத்தில் கொண்டாடப்படும் முதல் நூற்றாண்டு விழாவையும், இத்தருணத்தையொட்டி, திருத்தந்தை மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணத்தையும் இணைத்து, அத்திருத்தலம், உருவாக்கியுள்ள இலச்சினையை, திருப்பீட செய்தித் தொடர்பகம், இச்செவ்வாயன்று வெளியிட்டது.

எளிமையை விரும்பும் திருத்தந்தையின் எண்ணங்களை வெளிப்படுத்தும் வகையில், எளிய முறையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இலச்சினையை, தீனோ சாந்தோஸ் (Dino Santos) என்ற கலைஞர் உருவாக்கியுள்ளார்.

மரியாவின் மாசற்ற இதயம் என்ற மையப்பொருளை வெளிப்படுத்தும் வகையில், செபமாலையின் மணிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஓர் இதயம் இந்த இலச்சினையின் மையமாகவும், அதற்குக் கீழே, பாத்திமா திருத்தல பசிலிக்காவும் பதிக்கப்பட்டுள்ளன.

இந்த நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் மையப்பொருளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள, "நம்பிக்கையின், அமைதியின் திருப்பயணியான மரியாவுடன்" என்ற சொற்கள், இந்த இலச்சினையில் இடம்பெற்றுள்ளன.

இதற்கிடையே, பாத்திமாவில், அன்னை மரியா வழங்கிய காட்சிகளில் பங்கேற்ற மூவரில் ஒருவரான, லூச்சியா தோஸ் சாந்தோஸ் (Lucia dos Santos) அவர்களை, புனிதர் நிலைக்கு உயர்த்தும் ஆய்வுகளின் தொகுப்பினை, போர்த்துக்கல் நாட்டின் கோயிம்ப்ரா மறைமாவட்டம் நிறைவு செய்துள்ளது என்று அம்மறைமாவட்டம் அறிவித்துள்ளது.

கோயிம்ப்ரா புனித தெரேசா கார்மேல் துறவு மடத்தில், ஓர் அருள் சகோதரியாக வாழ்ந்து, 2005ம் ஆண்டு, தன் 97வது வயதில் இறையடி சேர்ந்த லூச்சியா தோஸ் சாந்தோஸ் அவர்களைக் குறித்த விவரங்கள் அடங்கிய 15,000த்திற்கும் அதிகமான பக்கங்கள், வத்திக்கானுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று, கோயிம்ப்ரா ஆயர், Virgilio Antunes அவர்கள், செய்தியாளர்களிடம் கூறினார்.

பாத்திமாவில், அன்னை மரியா வழங்கிய காட்சிகளில் பங்கேற்க வரம்பெற்ற மூவரில், பிரான்ஸிஸ்கொ மற்றும் ஜசிந்தா ஆகிய இருவரையும், திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்கள், 2000மாம் ஆண்டில், அருளாளர்களாக உயர்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : ZENIT / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.