2017-02-15 15:06:00

சாம்பலில் பூத்த சரித்திரம் – திருத்தூதர்கள் காலம் பாகம் 4


பிப்.15,2017. திருத்தூதர் பிலிப்பு, இஸ்ரேல் நாட்டிலுள்ள கலிலேயக் கடற்கரையிலுள்ள பெத்சாயிதா என்ற மீனவக் கிராமத்தைச் சேர்ந்தவர். திருத்தூதர்கள் பேதுரு, அந்திரேயா போன்றோரும் இதே மீனவக் கிராமத்தைச் சேர்ந்தவர்களே. இயேசு விண்ணேற்பு அடைந்த பின்னர், திருத்தூதர்கள், எருசலேமிலிருந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று நற்செய்தியை அறிவித்து, கிறிஸ்துவுக்காகத் தங்கள் உயிரைப் பலிகொடுத்தனர். திருத்தூதர் பிலிப்பு, இரஷியாவின் தென் பகுதியான சைத்தியா (Scythia) சென்று, அப்பகுதியில், இருபது ஆண்டுகள் தங்கி, பல்வேறு துன்பங்களுக்கு மத்தியிலும், மனஉறுதியுடன் நற்செய்தியை அறிவித்தார். பின், திருத்தூதர் பர்த்தலமேயோவுடன் சேர்ந்து, ஆசியா மைனர் சென்றார் பிலிப்பு. தற்போதைய துருக்கி நாடாகிய ஆசியா மைனரிலுள்ள கொலோசேயில் நற்செய்தி அறிவித்தார். இவர், பிரான்ஸ் நாடு சென்று Gaul இனத்தவருக்கும் நற்செய்தி அறிவித்தார் எனவும், திருத்தூதர்களில் இவர் ஒருவரே பிரான்ஸ் சென்றார் எனவும் சொல்லப்படுகிறது. பர்த்தலமேயுடன் சேர்ந்து, ஆசியா மைனரிலிருந்து, எராப்போலி (Hierapolis) சென்றார் பிலிப்பு. இந்நகரம் தற்போதைய Pamukkale நகரமாகும். கிரேக்க மொழியில், எராப்போலி என்றால், புனித நகரம் என்று அர்த்தம். துருக்கி நாட்டிலுள்ள இந்நகரம், வியப்புக்குரிய பாறைப் படிவங்களுக்கும், சூடான நீர் ஊற்றுகளுக்கும் புகழ்பெற்றது. இந்தப் பழமையான நகரிலுள்ள வெப்ப நீர் ஊற்றுக்கள், கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து இன்றுவரை, சுற்றுலாப் பயணிகள் செல்லும் இடமாக அமைந்துள்ளது. 

திருத்தூதர் பிலிப்பு, இத்தகைய புகழ்மிக்க நகரில், ஏராளமான அரும்செயல்களை ஆற்றினார். எராப்போலி மக்கள், தங்களுடைய கடவுளாக ஒரு பாம்பை வழிபட்டுக் கொண்டிருந்த காலம் அது. ஒருமுறை வழிபாடு நடந்து கொண்டிருந்தது. ஏராளமான மக்கள் சுற்றி நின்று பாம்பை வழிபட்டுக் கொண்டிருந்தார்கள். பிலிப்பு அவர்கள் முன்னால் வந்து நின்று கையில் சிலுவையை ஏந்திச் செபித்தார். உடனே பலிபீடத்தின் அடியிலிருந்து வெளியே வந்த ஒரு பெரிய பாம்பு, தனக்கு முன்னால் நின்றிருந்தவர்கள் மீது விஷத்தை உமிழ்ந்துவிட்டு இறந்து விட்டது. மக்கள் அதிர்ச்சியடைந்தார்கள். அந்த விஷம் பட்ட மக்கள் அங்கேயே இறந்தார்கள். அவர்களில் ஒருவன் அந்தப் பகுதி ஆளுநரின் மகன். கூடியிருந்த மக்கள் பிலிப்பு மற்றும் பர்த்தலமேயு மீது கொலை வெறி கொண்டார்கள். பிலிப்பு மனம் தளரவில்லை. மன்னனின் மகனின் கையைப் பிடித்துத் தூக்கினார். அவன் உயிர் பெற்றான். மக்கள் நடுங்கினார்கள். பாம்பை வழிபட்டுக் கொண்டிருந்த மக்களுக்கு பிலிப்புவின் செயல்கள், அச்சத்தையும் கோபத்தையும் கொடுத்தன. எப்படியும் பிலிப்புவை உயிருடன் விட்டால் இதேபோல இன்னும் பல சோதனைகளைச் சந்திக்க நேரிடும் என்று ஆளுநரும், ஆலயக் குருவும் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். எனவே திருத்தூதர்களைக் கொல்லவேண்டும் என்று தீர்மானித்தனர். அப்போது பிலிப்புவிற்கு வயது 87.

அதேநேரம், அந்நகரிலிருந்த உரோமை ஆளுநரின் மனைவி, திருத்தூதர்கள் பிலிப்பு மற்றும் பர்த்தலமேயுவால் அற்புதமாய் குணமடைந்தார். இதனால் அவர் கிறிஸ்தவரானார். இதனால் கோபமடைந்த அந்த ஆளுநர், இவ்விரு திருத்தூதர்களையும் சிலுவையில் அறைந்து கொலைசெய்யுமாறு ஆணையிட்டார். ஆயினும், நீதிபதிகள், ஏதோ ஒரு காரணத்திற்காக, பர்த்தலமேயுவை இத்தண்டனையிலிருந்து விடுதலை செய்தார்கள், ஆனால், பிலிப்பு சிலுவையில் அறையப்பட்டார் என ஒரு பாரம்பரியம் கூறுகிறது. மற்றொரு பாரம்பரியமோ, இவ்விரு திருத்தூதர்களும் சிலுவையில் அறையப்பட்டபோது நிலநடுக்கம் ஏற்பட்டு, எல்லாரையும் தரையில் வீழ்த்தியது. அப்போது, பிலிப்பு, இவர்களின் பாதுகாப்புக்காகச் செபித்தார். மக்கள் எல்லாரும் காப்பாற்றப்பட்டனர். இதனால், இவர்களை விடுதலை செய்யுமாறு மக்கள் குரல் எழுப்பினர். ஆயினும், பர்த்தலமேயு இறக்கவில்லை. பிலிப்பு இறந்துவிட்டார் எனக் கூறுகிறது. இன்னுமொரு பாரம்பரியம் இவ்வாறு கூறுகிறது. சிலுவையில் தொங்கிய பிலிப்பு, சிலுவையில் இயேசு விண்ணப்பித்தது போல தன்னைக் கொலைசெய்தோரை மன்னிக்குமாறு கடவுளை வேண்டினார். அதைக் கேட்ட மக்கள், மேலும் கோபமடைந்து, சிலுவையில் தொங்கிய பிலிப்புவை நோக்கி கற்களை எறிய ஆரம்பித்தார்கள். கற்கள் பிலிப்புவின் உடலைப் பதம் பார்த்தன. உடலெங்கும் காயங்களுடனும், இரத்தம் சொட்டச் சொட்ட கல்லடிபட்டு, கி.பி.80ம் ஆண்டில், பிலிப்பு இறந்தார். பிலிப்புவின் கல்லறை எராப்போலியில் இன்றும் இருக்கிறது. திருத்தந்தை மூன்றாம் யோவான் (கி.பி.560-572), திருத்தூதர் பிலிப்புவின் உடலை எராப்போலியிலிருந்து எடுத்துவந்து, உரோம், திருத்தூதர்கள் பிலிப்பு மற்றும் யாக்கோபு ஆலயத்தில் வைத்தார். உரோமைப் பேரரசன் Domitian (கி.பி. 81-96) கிறிஸ்தவர்களை துன்புறுத்திய காலத்தில், திருத்தூர் பிலிப்பு சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார். உருகுவாய், லக்சம்பர்க் ஆகிய நாடுகளுக்கு திருத்தூதர் பிலிப்பு பாதுகாவலர்.

திருத்தூதர்கள் வரலாறு தொடர்கின்றது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.