2017-02-15 15:32:00

ஒன்பது கர்தினால்கள் அவை 18வது கூட்டத்தின் அறிக்கை


பிப்.15,2017. வத்திக்கானின் பல்வேறு துறைகளில் மாற்றங்களைக் கொணர்வதற்கு, திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்கும் ஒன்பது கர்தினால்களின் கூட்டம், பிப்ரவரி 13, 14, 15 ஆகிய மூன்று நாட்கள், வத்திக்கானில் நடைபெற்றது.

18வது முறையாகக் கூடிவந்த இந்த கர்தினால்கள் அவை கூட்டத்தின் விவரங்களை, திருப்பீட செய்தித் தொடர்பகத்தின் இணைத் தலைவர், Paloma García Ovejero அவர்கள், இப்புதன் மதியம், செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டார்.

திருத்தந்தையின் தலைமைப் பணிக்கும், அவரது எண்ணங்களுக்கும் தங்கள் முழு ஆதரவும், ஒத்துழைப்பும் உண்டு என்று, ஒன்பது கர்தினால்களும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முன்னிலையில் கூறியது, இந்த ஆலோசனைக் கூட்டத்தின் ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்தது என்று, García Ovejero அவர்கள் தெரிவித்தார்.

நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயம், கீழை வழிபாட்டு முறை பேராயம், பல்சமய உரையாடல் திருப்பீட அவை, வத்திக்கானில் செயலாற்றும் நீதித்துறை ஆகிய துறைகள் குறித்த ஆலோசனைகள், இக்கூட்டத்தில் சிறப்பாக இடம்பெற்றன என்று García Ovejero அவர்கள் கூறினார்.

வத்திக்கான் தொடர்புத் துறையின் தலைவர், அருள்பணி Dario Edoardo Viganò அவர்கள், வத்திக்கான் வானொலி மற்றும், வத்திக்கான் தொலைக்காட்சி நிலையம் இரண்டையும் இணைக்கும் முயற்சிகளில் இதுவரை நிறைவேறியுள்ள மாற்றங்களை கர்தினால்களுக்கு விளக்கிக் கூறினார் என்றும், García Ovejero அவர்கள் எடுத்துரைத்தார்.

ஒன்பது கர்தினால்கள் ஆலோசனைக் குழுவின் 19வது  கூட்டம், வருகிற ஏப்ரல் மாதம், 24,25,26 ஆகிய நாட்களில் நடைபெறும் என்று, García Ovejero அவர்கள் செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.